Breaking News

``சிவசேனாவின் பிரிவினைக்கு நானும் எனது தந்தையும் தான் காரணம்” - உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே

சிவசேனா கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரேயும், ஏக்நாத் ஷிண்டேயும் சிவசேனாவுக்கு உரிமை கோரி வருவதால் தேர்தல் கமிஷன் இரு அணிக்கும் தனித்தனி பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கி இருக்கிறது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில், ``சிவசேனாவின் பிரிவினைக்கு நானும் எனது தந்தை உத்தவ் தாக்கரேயும் தான் காரணம். அவர்களை நானும் எனது தந்தையும் கண்மூடித்தனமாக நம்பினோம். அவர்கள் எங்களது ஆட்கள் என்று நினைத்தோம். கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு முதல்வரும் செய்யாத காரியமாக நகர்ப்புற மேம்பாட்டுத்துறையை பிரித்துக்கொடுத்தோம்.

இதன் மூலம் அவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று நினைத்தோம். எங்களது முதுகில் குத்தமாட்டார்கள் என்று நாங்கள் கண்மூடித்தனமாக நம்பினோம். நோட்டீஸ் அனுப்பியோ அல்லது போலீஸாரை கண்காணிப்புக்கு நியமித்தோ எதிர்க்கட்சிகளை நாங்கள் தொந்தரவு செய்தது கிடையாது. எங்களது சொந்த மக்களை நாங்கள் வேவு பார்த்ததும் கிடையாது. அரசியல் மிகவும் மோசமானது என்று நாங்கள் நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் மக்களுக்கு சேவை செய்யும் போது குப்பையில் ஓட வேண்டியதில்லை என்றும், சேற்றில் அழுக்காக வேண்டியதில்லை என்று நினைத்தோம். ஆனால் அதுதான் எங்களது தவறு” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்ததற்கு பாஜகதான் காரணம் என்று கருதுகிறீர்களா என்று கேட்டதற்கு, ``நாங்கள் அவர்களை போன்று மோசமான அரசியல் நடத்தவில்லை என்பது எங்களது தவறுதான். ஏக்நாத் ஷிண்டேயின் அணி இன்னும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவில்லை. மகாராஷ்டிராவையும், சிவசேனாவையும் சேதப்படுத்தவேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே நோக்கம் ஆகும். நாடு முழுவதும் ஏராளமான பால் தாக்கரேக்கள் இருக்கின்றனர். என்னை பொறுத்தவரை இனியும் கட்சியில் நெருக்கடி இருக்கிறதா என்பது கேள்வியல்ல. கட்சியில் இருந்து அவர்கள் 40 துரோகிகளுடன் ஓடிவிட்டனர். நாடு முழுவதும் முதுகில் குத்தும் சிறிய துரோகிகளை சட்டப்பூர்வமானவர்களாக அங்கீகரித்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் நெருக்கடி ஏற்படும். பிராந்திய கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சியிலும் சின்னம், கட்சிகளுக்கு உரிமை கோருபவர்கள் இருப்பார்கள். இதனால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் எதிர்காலம் என்ன என்பதுதான் கேள்விக்குறியாகும்” என்றார்.

`அலிபாபாவும் 40 திருடர்களும்’

அலிபாபாவும், 40 திருடர்களும் கதையை சுட்டிகாட்டிய ஆதித்ய தாக்கரே திருடுவதற்கு 40 நம்பர் மிகவும் முக்கியமான நம்பர் என்று குறிப்பிட்டார். ``ஏக்நாத் ஷிண்டேயை மக்கள் நிராகரிப்பார்கள். ஏக்நாத் ஷிண்டேயும் மற்றும் 40 எம்.எல்.ஏ.க்களும் தங்களது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்தியுங்கள். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம். எனது தந்தை டிசம்பர் மற்றும் ஜனவரியில் ஆபரேசன் செய்து கொண்டதால் அவரால் அமைச்சர்களை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. எனது தந்தையை நான் சந்திக்க சென்ற போது 3 கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்ட பிறகுதான் சென்றேன். அப்படி இருந்தும் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பில் இருந்தார்” என்றார்.

மோடி - ஆதித்ய தாக்கரே

நீங்களும், உங்களது தந்தையும் அமைச்சர்கள் மற்றும் கட்சித்தலைவர்களை சந்திக்கவில்லை என்று கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, ``கடந்த இரண்டரை ஆண்டுகால எங்களது ட்விட்டர் கணக்கை எடுத்துபாருங்கள். யாரையெல்லாம் சந்தித்து பேசியிருக்கிறோம் என்று தெரியும். எங்களுக்கு நீதி கிடைக்கும் போது எங்களது கட்சியின் வில் அம்பு சின்னம் எங்களுக்கு மீண்டும் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/zNkQYiJ

No comments