Breaking News

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய ஆதரவாளர் மீது கொலை மிரட்டல் வழக்கு! - என்ன நடந்தது?!

புதிய வீட்டு சிற்ப வேலைக்கு ரூ.33 லட்சம்!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான ராம் முனுசாமி, முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர். இந்நிலையில் ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த கபிலன் என்பவர், அப்பகுதி காவல் நிலையத்தில் கடந்த 29.08.2023 அன்று ராம் முனுசாமி உள்ளிட்ட மூன்று பேர் மீது புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “நான் 'Road Map IT Solution Private Limited' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் ரெட்டியார்பாளையத்தில்  கடந்த 2022 -ம் ஆண்டு புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினேன். புதிய வீட்டில் கருங்கல்லில் சிற்ப வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று வீட்டைக் கட்டிய பொறியாளர் கூறியதுடன், கருணாகரன் என்பவரையும் அறிமுகப்படுத்தினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் அறையில் அவருடன் உணவருந்தும் ராம் முனுசாமி.

அந்த கருணாகரன் கருங்கல் சிற்ப வேலைக்கு ரூ.18 லட்சம் செலவாகும் என்று கூறினார். அந்த தொகைக்கு நான் சம்மதித்து வேலையை தொடங்கும்படி கூறினேன். ஒருகட்டத்தில் இன்னும் கூடுதலாக ரூ.15 லட்சம் செலவு செய்து சிற்ப வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்று கருணாகரன் கூறவே, நானும் சம்மதித்து முழு தொகையான ரூ.33 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். சிற்ப வேலை முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் என் வீட்டிற்கு வந்த கருணாகரன், மேலும் பணம் வேண்டும் என்று கேட்டார். முழு பணத்தையும்தான் உங்களுக்கு கொடுத்துவிட்டேனே, அப்புறம் ஏன் மீண்டும் உங்களுக்கு பணம் தர வேண்டும் என்று நான் கேட்டேன்.

`தற்கொலை செய்துகொள்வாய்...’

அதற்கு உன்னிடம் எப்படி பணம் வாங்குகிறேன் பார் என்று என்னை மிரட்டும் தோரணையில் கூறிவிட்டு சென்றார். அதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் என் மகனுக்கு திருமணம் நடந்தது. அதற்கு முன்பு என்னை தொடர்புகொண்ட சீனு கந்தகுமார் என்பவர், தான் ராம் முனுசாமியின் உதவியாளர் என்றார். உடனே நான் ராம் முனுசாமி என்பவரை தொடர்புகொண்டபோது, ‘ஆம் நான்தான் அவரை அனுப்பினேன். கருணாகரனுக்கு நீ பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னைப்பற்றி பொய்யான தகவல்களை வெளியிட்டு, உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன்’ என்றும் `உன் மகனின் திருமணத்தையும் நிறுத்திவிடுவேன்’ என்றும் கூறினார்.

FIR

அத்துடன், `அந்த அவமானத்தில் நீயும் தற்கொலை செய்துகொள்வாய்’ என்று கூறி எனக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தினார். அத்துடன் கருணாகரன் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால், என் மகன் திருமணத்தில் 50 பேரை அழைத்து வந்து தகராறு செய்து திருமணத்தை நிறுத்திவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனால் என்ன செய்வதென்று தெரியாத நான், என் நண்பரும் லாஸ்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏவுமான வைத்தியநாதனிடம் இதுகுறித்து கூறினேன். அப்போது அவர் `முதலில் திருமணத்தை முடியுங்கள்’ என்றார்.

சபாநாயகரிடம் எம்.எல்.ஏக்கள் புகார்

அதையடுத்து அவர்கள் கேட்ட ரூ.7 லட்சத்தை சீனு கந்தகுமாரும், கருணாகரனும் லாஸ்பேட்டில் என்னிடம் வாங்கிக் கொண்டு சென்றனர். ஆனால் தற்போது மீண்டும் என்னை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அன்றைய தேதியில் என் மகனின் திருமணம் இருந்ததாலும், அவர்கள் மீது உள்ள பயத்தாலும் என்னால் உடனடியாக காவல் நிலையம் வந்து புகார் கொடுக்க முடியவில்லை. அதனால் என்னிடம் பணம் பறித்த ராம் முனுசாமி, சீனு கந்தகுமார் மற்றும் கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதனடிப்படையில் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளரான ராம் முனுசாமி மற்றும் சீனு கந்தகுமார், கருணாகரன் மீது கொலை மிரட்டல் வழக்கைப் பதிவு செய்திருக்கின்றனர் ரெட்டியார்பாளையம் போலீஸார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதன், தி.மு.க எம்.எல்.ஏ சம்பத், சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சிவசங்கரன் மற்றும் பிரகாஷ்குமார் அனைவரும், ‘ராம் முனுசாமியை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கூடாது’ என்று மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சபாநாயகர் செல்வத்திடம் கேட்டபோது, ``முதல்வர்தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று முடித்துக் கொண்டார்.

சட்டப்பேரவையில் முதல்வர் அறையில் அவருடன் அமர்ந்து உணவருந்தும் அளவுக்கு முதல்வருக்கு நெருக்கமான ராம் முனுசாமி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/Ulg9mrZ

No comments