Breaking News

நாடாளுமன்றம்: `அண்ணா தொடங்கி திருமா வரை!' சபையில் ஒலித்த ஜனநாயகத் தமிழ்க் குரல்கள் - விரிவான பார்வை!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. 75 ஆண்டுகாலமாகப் பல்வேறுபட்ட விவாதங்களையும் திருப்புமுனைகளையும் சந்தித்த பழைய நாடாளுமன்றக் கட்டடம், எத்தனையோ நினைவுகளைத் தாங்கி உறைந்திருக்கிறது. இத்தகைய நினைவுகளில் தமிழ்நாட்டுக்கும் ஒரு முக்கியமான பங்கு உண்டு.

இந்திய நாடாளுமன்றம் அமைக்கப்படுவதற்கு முன்பே, அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்று விவாதங்களில் பங்குபெற்ற பெருமை தமிழர்களுக்கு உண்டு. பின்னாளில் குடியரசுத்தலைவரான ராதாகிருஷ்ணன், ப.சுப்பராயன், ஓ.வி.அழகேசன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, காயிதேமில்லத், என்.கோபாலசாமி அய்யங்கார், காமராஜர், சி.சுப்பிரமணியம், கக்கன், காமராஜர், எம்.ஏ.முத்தையா செட்டியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார் எனப் பலரும் அடங்குவார்கள். இதில் அரசியல் நிர்ணயசபை உறுப்பினர், சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என்று நான்கு பதவிகளையும் வகித்த ஒரே தமிழர் காயிதேமில்லத்.

அண்ணா, காயிதேமில்லத்

இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தபோதே, இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்தவர் காயிதே மில்லத்.

“பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால், இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பேசியவர் அவர்.

பிறகு இந்திய நாடாளுமன்றம் அமைந்தபோதும் இதே குரலை வலியுறுத்தியவர். இந்திய முஸ்லீம் லீக் தலைவராக இருந்தபோதும் ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாக ஒலித்தவர் காயிதேமில்லத். 1971ல் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை ஆக்கிரமித்தபோது பாகிஸ்தானுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் கண்ணியமிக்க காயிதேமில்லத்.

காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்களும் ஆக்கிரமித்த இந்திய நாடாளுமன்றத்தில் தெற்கின் பிரதிநிதித்துவத்தை ஒலித்த குரல் முதன்முதலாக எழுந்தபோது வடக்கு அதிர்ந்தது.

'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்ற உரிமைக்குரல், 'இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்ற மொழியுரிமைக் குரல், 'ஆரியப் பண்பாட்டுக்கு எதிராகத் திராவிடர்களுக்கு என்று தனிப்பண்பாடு உண்டு. அது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவம் செய்வது' என்ற அடையாளக்குரல் அறிஞர் அண்ணாவுடையது. இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் ஒலித்த அண்ணாவின் குரல் புதிய குரலாக இருந்தது.

அறிஞர் அண்ணா, தந்தை பெரியார்

தேசிய நீரோட்டத்தில் இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்கள் இணைந்த காலகட்டம் அது. இந்திய சுதந்திரத்தை ஏற்காமல் பெரியார் தேர்தல் பாதை புறக்கணிப்பு, கடவுள் மறுப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, திராவிடநாடு விடுதலை ஆகியவற்றை முன்வைத்தார். பெரியாரிடம் இருந்து விலகிவந்த அண்ணாவோ 'ஒன்றேகுலம் ஒருவனே தேவன்', தேர்தல் பங்கேற்பு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகியவற்றுடன் திராவிட நாடு விடுதலையையும் முன்வைத்தார்.


நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1962-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி அண்ணா கன்னிப்பேச்சு எனப்படும் தன் முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது நடந்த குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அவர் பேசியதே, கன்னிப்பேச்சு.

"குடியரசுத் தலைவரின் உரைமீது பேசிய ஆளும் கட்சியினருக்கு அவர்களின் பேச்சில் ஒருவித பெருமிதமும், செருக்கும் இருப்பதைப் பார்த்தேன். 'ஓ... நாமும் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எனவே எது பேசினாலும் அது சரியாகத்தான் இருக்கும்; எதைச் செய்தாலும் சரியாக இருக்கும். எனவே சிறிய கட்சிகளுக்கு நம்மைத் தட்டிக் கேட்க உரிமை இல்லை' என்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.
பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எந்தக் கட்சிக்கும் வெற்றிக்களிப்பை அடைய உரிமை உண்டு.

ஆனால், பலமான உள்கட்டமைப்பு கொண்ட காங்கிரஸ் போன்ற கட்சி பல்வேறு அக்கறையும் கொள்கைகளும் கொண்ட எதிர்க்கட்சி குழுக்களை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல. வெற்றியில் பெருமிதம் கொள்வதைக் காட்டிலும் ஆளும் கட்சி பணிவையும், ஜனநாயகத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தொடக்கத்திலேயே இந்தியாவின் மிகப்பெரும் பலம்வாய்ந்த கட்சிக்கு வலிமையான அறிவுரையை அண்ணா முன்வைத்தார். உண்மையில் அதுதான் ஜனநாயகத்தின் உண்மையான விழுமியமும்கூட.

அறிஞர் அண்ணா

'ஜனநாயகம், சோசலிசம்' என்று காங்கிரஸால் வலியுறுத்தப்படும் மதிப்பீடுகள் உண்மையில் ஆளும்கட்சியாலேயே கேலிக்கூத்தாக்கப்பட்டதை அண்ணா தன் முதல் உரையில் சுட்டிக்காட்டியபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறிக்கீடு செய்தனர். 'ஒருவரின் கன்னிப்பேச்சில் மற்றவர்கள் குறுக்கிடக்கூடாது' என்பது மரபு. ஆனால் அதையும் மீறி காங்கிரஸ் உறுப்பினர்கள் குறுக்கிட்டபோது., "இது எனது கன்னிப் பேச்சுதான், ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைபவன் நான் அல்ல. எனவே, அவற்றை விரும்புகிறேன்" என்று துணிச்சலுடன் சொன்னார் அண்ணா.

"ஜனநாயகத்தை பொறுத்தவரை, விகிதாசார பிரதிநிதித்துவ முறையும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட செயலுக்கு பொதுமக்களின் ஆதரவு உண்டா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு முறையும் இந்தப் பெரிய துணைக்கண்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாதவரை ஜனநாயகத்துக்கான எந்த பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது" என்று அண்ணா சொன்னது இன்றளவும் மதிப்புமிக்கது.உண்மையில் இன்றைய தேர்தல்முறை, ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் அதில் பல சிக்கல்கள் உள்ளன.

அறிஞர் அண்ணா

2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒரே ஒரு எம்.பி சீட்டைக்கூட பெறவில்லை. ஆனால், தமிழ்நாடே ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த பா.ஜ.கதான் இந்தியாவின் ஆளுங்கட்சி, மோடிதான் தமிழ்நாட்டுக்கும் பிரதமர் என்றால் உண்மையில் தமிழ்நாட்டின் குரலுக்கு இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் என்னதான் மதிப்பு?

அதனால்தான் எண்ணிக்கைப் பெரும்பான்மையைவிட விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைத் தி.மு.க தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறது. அதை அண்ணா தன் முதல் நாடாளுமன்ற உரையிலேயே முன்வைத்தார்.

நெடுங்காலமாகவே 'தமிழர்கள் என்றாலே மொழிவெறியர்கள்' என்ற பிம்பம் வடநாட்டில் கட்டமைக்கப்பட்டது. காரணம் தமிழ்நாட்டின் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குரல். இத்தனைக்கும் வடநாட்டில் இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாநிலங்களும் இத்தகைய மனநிலையைத்தான் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்று இந்தி மாயை கொஞ்சம்கொஞ்சமாகக் கலைந்து மொழித்திணிப்புக்கு எதிரான குரல்கள் பல வடமாநிலங்களிலேயே எழுகின்றன. அண்ணா தன் முதலுரையிலேயே மொழித்திணிப்புக்கு எதிரான குரலைப் பதிவு செய்தார்.

"நாங்கள் தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஆனால், இங்கு ஆங்கிலத்தை அறிந்தபோதும் உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதையும் இந்தியிலேயே பதில் பெறுவதையும் பார்க்கிறோம். அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் மின்னுவதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? 'நீங்கள் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள்' என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கான வழியா? தேசிய ஒருமைப்பாடு என்று சொல்வது முன்னுக்குப்பின் முரணான வாசகம் என்றுதான் கூறுகிறேன். ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடு ஆகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் இப்போது ஒருமைப்பாட்டை வலியுறுத்த என்ன அவசியம் வந்தது?" என்று அண்ணா அன்று எழுப்பிய கேள்வி இன்றளவும் அர்த்தம்வாய்ந்தது.

காமராஜர், அறிஞர் அண்ணா

"டெல்லிக்கு நான் வந்து 10 நாட்களாகின்றன. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை ஆனாலும், நான் மரம் அடர்ந்த சாலைகளுக்கு, புதிய வீதிகளுக்கு, பூங்காக்களுக்குச் சென்றேன். இங்கே ஒரு வீதிக்காவது தென்னாட்டைச் சேர்ந்தவரின் பெயரை வைக்க வேண்டுமென்ற எண்ணமே இந்திய அரசுக்குத் தோன்றாதது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

இன்றும் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு காந்தி, நேரு, நேதாஜி பெயர்கள் வைக்கப்படுகின்றன. மிகச்சமீபத்தில்கூட பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை ஒரு குழந்தைக்கு யோகி ஆதித்யநாத்தின் பெயர் சூட்டினார். ஆனால் வடநாட்டில் காமராஜர், கக்கனின் பெயர்கள் சூட்டப்படுவதில்லை என்பதுதான் எதார்த்தம்.

அதேபோல் தமிழ்நாட்டில் பல வடமாநிலத் தலைவர்களின் பெயர்களைத் தாங்கி சாலைகளும் பூங்காங்களும் நினைவுமண்டபங்களும் அண்ணாவின் திராவிடக்கட்சித் தலைவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், காமராஜர் போன்ற தமிழ்நாட்டு தேசியத் தலைவர்களின் பெயரோ பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத்தலைவர்களின் பெயர்களோ வடநாட்டில் வைக்கப்படுவது அரிதினும் அரிது.

அண்ணா நாடாளுமன்றத்தில் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தியாவின் பன்முகத்தன்மையைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

இந்தியை ஆட்சிமொழி ஆக்கும் முயற்சிக்கு எதிராக 1963 மே மாதம் பேசிய அண்ணா "ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டுமல்ல; சிறுபான்மை மக்களின் உணர்வுகளையும் மதிப்பதே ஜனநாயகம். இந்தியர்கள் அனைவருக்கும் பொதுமொழி வேண்டும் என்று பலரும் பலவிதங்களில் வாதாடினார்கள். அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பொதுமொழியாக ஏற்க வேண்டும்.

அதனால்தான் இந்தியாவைத் துணைக்கண்டம் என்று அழைக்கிறோம். தேசியகீதமான 'ஜனகணமண'வும் 'வந்தேமாதரம்' பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல" என்று அண்ணா ஆற்றிய விரிவான உரையை 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல்காந்தியே அதே நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கிறார்.

அறிஞர் அண்ணா, வாஜ்பாய்

கருத்தியலில் மாறுபட்டபோதும் அண்ணாவுக்கு அன்றைய நாடாளுமன்றத்தில் பல நண்பர்கள் இருந்தனர். குறிப்பாக இடதுசாரிகளில் பூபேஷ்குப்தா, வலதுசாரிகளில் வாஜ்பாய். அதனால்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ஆனபிறகும் வாஜ்பாய், “தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம், பெருமைமிகு சரித்திரத்தின் மீது நான் எப்போதும் மதிப்புடையவன். தமிழ்நாடு என்றாலே, மதிப்புக்குரிய நண்பரான திராவிட இயக்க ஜாம்பவான் அண்ணாதுரைதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருவார். தமிழ் மக்களின் உணர்வுபூர்வ வீரராக அவர் திகழ்ந்தார்.

எளிமையான, மிக அன்பான, உயர்ந்த எண்ணம் கொண்ட மாமனிதர் அண்ணா. நாடாளுமன்றத்தில் திராவிடக் கலாச்சாரத்தை உருவாக்கியவர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி!” என்று நினைவுகூர்ந்தார்.

1967-ல் தென்சென்னை தொகுதியில் வென்ற அண்ணா, தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முரசொலிமாறன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

'பிரிவினைவாதத் தடை சட்ட'த்தை இந்திய அரசு கொண்டுவந்ததால் தி.மு.க திராவிடநாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டது. அதற்கு மாற்றாக 'மாநில சுயாட்சி' என்னும் கருத்தாக்கத்தைத் தி.மு.க முன்வைத்தபோது அதுகுறித்து முக்கியமான புத்தகத்தை எழுதியவர் முரசொலி மாறன். அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் தி.மு.க.வின் தலைவரானபின் டெல்லியில் தி.மு.க.வின் நலன்களைப் பிரதிபலிக்கும் கலைஞரின் மனச்சாட்சியாக இருந்தார் முரசொலி மாறன்.

தி.மு.கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினரே இல்லாத காலத்திலும் வி.பி.சிங் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பிறகு, வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலும் மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் பல்வேறு முக்கியமான விவாதங்களில் பங்குகொண்டார். கத்தாரின் தோஹாவில் நடந்த உலக வர்த்தக கூட்டமைப்பின் மாநாட்டில் முரசொலிமாறன் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் வளர்ந்த நாடுகளால் எடுக்கப்பட்ட முயற்சிகளை மாறன் கண்டித்துப் பேசினார். மதச்சார்பின்மையையும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் முன்வைத்து நாடாளுமன்றத்தில் முரசொலிமாறன் ஆற்றிய உரை ஒன்று முக்கியமானது.

வைகோ, முரசொலி மாறன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாடாளுமன்றம் என்றாலே நினைவுக்கு வருபவர் வைகோதான். 18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்த வைகோ 23 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ல் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். இந்தி எதிர்ப்பு, மாநிலங்களின் உரிமை, ஈழப்பிரச்னை ஆகியவற்றை வைகோ தொட்டாலே நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும்.


1978ல் வைகோ முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினரான சமயம். இந்தி திணிப்பிற்கு எதிராக முரசொலிமாறன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அதுகுறித்து பேசிக்கொண்டிருந்த வைகோ, மத்திய அரசு அவருக்கு இந்தியில் அனுப்பிய கடிதத்தை அந்த அவையிலேயே கிழித்தெறிந்தார். மேலும், "இந்தக் கடிதங்கள் கிழிக்கப்பட்டதுபோல் மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் கிழித்தெறிவார்கள்" என அப்போதைய பிரதமர் மொராஜி தேசாயிடம் ஆவேசமாகக் கூறினார்.

வைகோ ரகசியமாக இலங்கைக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்து சர்ச்சையாகியிருந்த காலகட்டம். வைகோ நாடாளுமன்றத்துக்கு வருகிறார். சங்கர் தயாள் சர்மா துணை குடியரசுத்தலைவர் ஆன பிறகு முதன்முதலாக மாநிலங்களவைக்கு வருகிறார். ஈழத்திற்கு அமைதிப்படை போயிருந்த நேரம், திலீபன் இறந்திருந்த நேரம், யுத்தம் ஆரம்பமாகியிருந்த நேரம். சபை கூடுகிறது... சங்கர்தயாள் வந்து உட்காருகிறார், கேள்வி நேரம் தொடங்குகிறது, வைகோவுக்கு வாய்ப்பு வழங்காமல் சங்கர்தயாள் சர்மா மற்ற உறுப்பினர்களைப் பேச அழைக்கிறார்.

வைகோவோ ஈழத்தமிழர்களின் இன்னல் குறித்து குறுக்கிட்டுப் பேசுகிறார். இருந்தும் அவரை பேசவிடாமல் சங்கர் தயாள் சர்மா கேள்வி நேரம் முடியட்டும் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். அப்போது வைகோ, "எங்கள் மக்கள் அங்கு கொல்லப்படுகின்றனர், அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிக்கொண்டிருக்கிறது ஆனால் நீங்கள் இங்கு கேள்வி நேரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இந்த கேள்வி நேரத்தைப்பற்றி அக்கறையில்லை" எனக் கூறினார். இதனால் கோபமடைந்த அவர் வைகோவை அவையிலிருந்து வெளியேற்றினார். இப்படி பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம்.

வைகோ, பிரபாகரன்

23 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றம் வந்த வைகோ தன் முதல் உரையை ஆற்றிய தருணம், மத்திய அரசு கொண்டுவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தது. “இந்த அவையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, ஓர் அடக்குமுறைச் சட்டமாகும். மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள், இந்த அரசை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெரிக்கிற சட்டம் ஆகும்.
நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிட விரும்புகிறேன். முன்பு, யாரெல்லாம் இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களே ஆட்சிக்கு வந்தபிறகு இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள் என்பதுதான் வேதனை.

வைகோ

ஏற்கெனவே, வாஜ்பாயால் கொண்டுவரப்பட்ட 'பொடா' சட்டத்தின்கீழ் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். 19 மாதங்கள் சிறையில் இருந்தேன். உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'உங்கள் மனத்தில் அச்சமிருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டிருக்கிறார். ஆனால், அச்சத்தைப் போக்கவேண்டிய அரசே இன்று மக்கள் மனங்களில் அச்சத்தை விதைத்துவருகிறது. எந்தவொரு சட்டமும் மனித உரிமைக் காவலர்களையும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களையும் மேலும், அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது" என்றார் வைகோ தன் அனுபவத்தின் வலியிலிருந்து.

சி சுப்பிரமணியம், பி.ராமமூர்த்தி கே டி கே தங்கமணி, இரா. செழியன் போன்ற பல  தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்துக்குச் சென்று பல முக்கியமான விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைவரான கே.டி.கே.தங்கமணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அமைச்சர்களோடு வாதாடி மதுரைக்கு விமான நிலையத்தைக் கொண்டு வந்தார். விடுதலைக்குப் பின் முதன்முதலில் உருவாக்கப்பட்ட விமானநிலையம் அதுதான்.

சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று சட்டபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட பி.ராமமூர்த்தி தன் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே குரல் எழுப்பினார். அதன் விளைவாக, இதற்கான அரசமைப்புத் திருத்தத் தனிநபர் மசோதாவை, கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற மேலவையில் பூபேஷ் குப்தா அறிமுகம் செய்தார். இது 1963-ல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பி.ராமமூர்த்தியோ சிறையில் இருந்தார். மசோதாவை வலியுறுத்திப் பேசிய பூபேஷ் குப்தா, “தியாகி சங்கரலிங்கனாரின் போராட்டத்தையும் அவரது கொடுமையான மரணத்தையும் மனதில் நினைத்துப் பார்த்து இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். மசோதாவை வரவேற்றுப் பேசிய அண்ணா, “இதை முழு மனதுடனும், முழுமையாகவும், உண்மையாகவும் ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.

இப்படி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஜனநாயகத்துக்கும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரே ஒரு தமிழர்தான். அதன்பிறகு ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன் என்று இரு தமிழர்கள் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தன்னாலான பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

சு.வெங்கடேசன், தொல்.திருமாவளவன், ஆ,ராசா

இப்போதும் திருச்சி சிவா, ஆ,ராசா, தயாநிதி மாறன், சு.வெங்கடேசன், செந்தில்குமார், தொல்.திருமாவளவன், ரவிக்குமார் என்று தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் 1975ல் நெருக்கடிநிலை காலகட்டத்தில் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகமே கேள்விக்குள்ளானபோது ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுத்ததும் வடநாட்டுத் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததும் தமிழ்நாடுதான்.


நாடாளுமன்றப் பழைய கட்டடத்தின் வரலாற்றுத் தருணங்கள் தமிழ்க்குரல்களுடன் இணைந்தவை. இப்போதைய புதிய கட்டடத்திலும் தமிழ்க்குரல்கள் உரத்து ஒலிக்கும். நாளைய வரலாற்றில் அவை பதிவாகும். 



from India News https://ift.tt/V7wJRTv

No comments