பிரியாணி கடையில் உணவருந்திய சிறுமி உயிரிழப்பு : மருத்துவமனையில் 40 பேர் அனுமதி; உரிமையாளர், சமையலர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், கடந்த 8-ம் தேதி நூற்றுக்கணக்கானோர் அசைவ உணவு உட்கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு வாந்தி, தலைவலி, மயக்கம், காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில், ஆரணி நகரம் லட்சுமி நகரில் வசித்த ஆனந்தன் மகள் லோஷினி(10) என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஆனந்தன்(40), அவரது மனைவி பிரியதர்ஷிணி(32), மகன் சரண்(12) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 40 பேர் பாதிக்கப்பட்டு ஆரணி, போளூர் மற்றும் வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில், இறந்த சிறுமி மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் ‘தந்தூரி சிக்கன்’ உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரணி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பிரியாணி கடையின் உரிமையாளரான ஷரப் பஜாரில் வசிக்கும் காதர் பாஷா மகன் அம்ஜத் பாஷா(32), புலவன்பாடி கிராமத்தில் வசிக்கும் சமையலர் முனியாண்டி(35) ஆகியோரை கைது செய்தனர். அம்ஜத் பாஷாவுக்கு சொந்தமான 2 பிரியாணி கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hnlN38
via
No comments