Breaking News

`திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் அமர ஆசைப்பட்ட வி.ஐ.பி-க்கள்!’ -மோன்சன் மாவுங்கல்லின் மோசடி லீலைகள்

மோட்டிவேஷன் ஸ்பீக்கர், தெலுங்கு சினிமா நடிகர், ஆயுர்வேத டாக்டர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர் என தன்னைக் காட்டிக்கொண்டவர் கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல். சேர்த்தலையிலும், கொச்சியிலும் பிரம்மாண்ட வீடுகள் உள்ளன. கொச்சியில் உள்ள வீட்டில் பழமையான பொருட்களின் மியூசியம் என பல பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் புருனே சுல்தானின் கிரீடம் விற்ற வகையில், தனக்கு 70,000 கோடி ரூபாய் வரவேண்டி உள்ளது. அதற்கு வரி செலுத்துவதற்காக பணம் வேண்டும் என ரூ.6.27 கோடி வாங்கி மோசடி செய்ததாக சேர்த்தலாவைச் சேர்ந்த ஷாஜி என்பவர் அளித்த புகாரின் பேரில் க்ரைம் பிரான்ச் போலீஸார் மோன்சன் மாவுங்கல்லை கைது செய்துள்ளனர். ஏற்கனவே சுமார் 12 கோடி ரூபாய்க்கான மோசடிக்கான புகார் சென்றுள்ள நிலையில் மோன்சன் மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் மோன்சனின் மியூசியத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்து போலியானவை என தெரியவந்துள்ளன.

மோன்சன் மாவுங்கல்

வி.ஐ.பி-க்களை தனது மியூசியத்துக்கு வரவழைக்கும்போது திப்பு சுல்தானின் சிம்மாசனம் எனக்கூறி ஒரு இருக்கையில் அமர வைப்பது வழக்கம். அந்த சிம்மாசனத்தில் கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். வி.ஐ.பி-க்கள் சிம்மாசனத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அதில் அமர்ந்து புகைப்படம் எடுக்க பல வி.ஐ.பி-க்கள் ஆசைப்பட்டுள்ளனராம்+.

Also Read: ``சுல்தானின் கிரீடம் விற்றதில் ரூ.70,000 கோடி வரவிருக்கிறது"- `மோசடி' மோன்சன் மாவுங்கல் கைது!

இப்போது அந்த சிம்மாசனம் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் மியூசியத்தில் உள்ள யானைத் தந்தங்கள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் என அனைத்தும் போலியானவை எனக் கூறப்படுகிறது. மியூசியத்தில் இருக்கும் அத்தனை பொருட்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும், சுங்கத்துறையினர் மோன்சன் மாவுங்கல்லின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

மோன்சன் மாவுங்கல்

தன்னிடம் இருந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பொருட்களை விற்பனை செய்ததில் தனக்கு பணம் வரவேண்டியுள்ளதாகவும், அதற்கு வரி செலுத்தினால் பணம் வந்துவிடும், அதற்காக இப்போது பணம் தந்தால் பல கோடியாக திருப்பித் தந்துவிடுவேன் எனக்கூறி பலரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் மோன்சன் மாவுங்கல். மோசடி மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர கார்கள் வாங்கி தனது வீட்டின் முன்புறம் நிறுத்திவைத்து தன்னை முக்கிய புள்ளியாக காட்டியுள்ளார். அவரைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்களை வைத்திருப்பார். இப்போது சிறையில் இருக்கும் மோன்சன் மாவுங்கல்லிடம் முழு விசாரணை நடத்தினால் மோன்சன் மாவுங்கல் வைத்திருந்த திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் அமர்ந்து குதூகலித்த வி.ஐ.பி-க்களின் விபரங்கள் வெளியாகும் என்கிறார்கள் அதிகாரிகள்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3m4qKiM

No comments