Breaking News

உத்தரப்பிரதேசம்: நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்; யோகி அரசுக்கு எதிராகத் திரும்பிய விவசாயிகள்?!

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘ஹாட்ரிக்’ அடிக்க வேண்டுமென்றால், அதற்கு முன்பாக உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உ.பி-யின் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலும், அதற்கடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவது வழக்கம்.

ராமர்கோவில்

அந்த வகையில், வரும் மார்ச் மாத வாக்கில் நடைபெறவிருக்கும் உ.பி சட்டமன்றத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை மிகப்பெரிய சாதனையாகக் கருதிக்கொண்டிருக்கும் பா.ஜ.க., தனது நீண்ட காலத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதன் மூலமாக வரக்கூடிய தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று கணக்குப் போடுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு அங்கு பல சவால்கள் உருவெடுத்துள்ளன.

இரண்டாவது கொரோனா அலையின்போது பெருந்தொற்றுப் பரவலையும் அதன் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக யோகி அரசு மீது பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பா.ஜ.க-வினரே யோகி அரசைக் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் யோகி அரசின் நிர்வாகம் இருந்தது. கொரேனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்தது, அந்த சடலங்களை நாய்கள் இழுத்துச்செல்வது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் யோகி அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கின. இந்தச் சூழலில், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அர்விந்த் குமார் சர்மா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, உ.பி-யின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அர்விந்த் குமார் சர்மா, அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு உ.பி மாநில பா.ஜ.க துணைத்தலைவர் ஆனார். பிறகு, யோகியே முதல்வர் வேட்பாளர் என்று கட்சித் தலைமை முடிவெடுத்ததாக செய்தி வெளியானது.

விவசாயிகள் போராட்டம்

அடுத்த சில மாதங்களில் உ.பி-யில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இப்போது யோகி அரசுக்குப் பெரிய தலைவலி ஆரம்பித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டத்தின் நீட்சியாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகரில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டம் நடைபெற்றுவருகிறது. சுமார் 40 விவசாய இயக்கங்கள் இணைந்து செப்டம்பர் 7-ம் தேதி நடத்திய ‘மகா பஞ்சாயத்து’ என்ற பெயரிலான போராட்டம் உ.பி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க அரசு மீதான விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காக, சமீபத்தில் பல நடவடிக்கைகளை யோகி அரசு மேற்கொண்டது. விவசாயிகளை அழைத்து பல வாக்குறுதிகளை யோகி வழங்கினார். போராட்டங்களின்மீது விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும், மின் கட்டண பாக்கி வைத்துள்ள விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது எனப் பல அறிவிப்புகளை யோகி அரசு அறிவித்தது. கரும்புக்கான விலையை உயர்த்தியதுடன், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகை முழுவதையும் யோகி அரசு பட்டுவாடா செய்தது. யோகி அரசின் இந்த அறிவிப்புகள், நடவடிக்கைகளால் விவசாயிகளின் கோபம் தணிந்துவிடவில்லை என்பது தற்போது தீவிரமடைந்துள்ள போராட்டத்தின் வாயிலாகத் தெரிகிறது.

விவசாயிகள் போராட்டத்தில்...

வரவிருக்கும் உ.பி சட்டமன்றத் தேர்தலில் யோகி அரசுக்கு எதிராகப் பிரசாரத்தை முன்னெடுப்போம் என்று முசாபர்நகரில் கூடிய விவசாயிகளின் `மகா பஞ்சாயத்து' அறிவித்துள்ளது. விவசாயிகள் சங்கத் தலைவர்களான ராகேஷ் திகாய்த், மகேந்திர சிங் திகாய்த் பங்கேற்றுள்ள அந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டத்தை உ.பி முழுவதும் நடத்துவதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். லக்னோ, வாரனாசி, கோரக்பூர் உள்பட பல இடங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் ‘மகா பஞ்சாயத்து’ நடத்தவிருக்கிறார்கள். லக்னோவை டெல்லியாக மாற்றுவோம் என்று அறிவித்துள்ள அவர்கள், யோகி அரசை அகற்றுவோம் என்ற முழக்கத்தை எழுப்புகிறார்கள்.

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: சூடுபிடிக்கும் களம்... 9 மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம்?

இத்தகைய சூழலில், 2012-ல் ஆட்சியை இழந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒருபுறமும், 2017-ல் ஆட்சியை இழந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மறுபுறமும் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு உ.பி-யில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியும், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி தேர்தல் உத்திகளை வகுத்துவருகிறது.

யோகி ஆதித்யநாத்

பா.ஜ.க அரசுக்கு எதிராகத் தீவிரமடையும் இந்தப் போராட்டத்தை மாயாவதியும், அகிலேஷும், பிரியங்காவும் ஆதரிப்பதில் ஆச்சர்யம் இல்லை. இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் பா.ஜ.க எம்.பி-யான வருண் காந்தி, “முசாபர்நகரில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். நமது ரத்தமும் சதையும்தான் அவர்கள். அவர்களின் வேதனையையும் கோரிக்கையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார். உ.பி சட்டமன்றத் தேர்தல் திசைவழியை விவசாயிகள் போராட்டம் தீர்மானிக்குமா?



from தேசிய செய்திகள் https://ift.tt/3hh1dRS

No comments