Breaking News

குருவாயூர்: துர்கா ஸ்டாலின் எடைக்கு எடை சர்க்கரை... துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்துவதைப் பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களில் துர்கா ஸ்டாலின் வழிபாடு நடத்தியிருக்கிறார். கடவுள் மறுப்பு கொள்கைகொண்ட திராவிட குடும்பத்தைச் சேர்ந்த துர்கா ஸ்டாலின் கோயில்களில் வழிபாடு நடத்துவதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தும் வருகின்றனர். ஆனாலும், துர்கா ஸ்டாலின் கோயில்களில் வழிபாடு நடத்துவதிலிருந்து பின்வாங்கவே இல்லை. அதிலும் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆன பிறகு கோயில்களில் வழிபாடு நடத்துவதை இன்னும் தீவிரமாக்கியுள்ளார் துர்கா ஸ்டாலின். இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் துர்கா ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.

துர்கா ஸ்டாலின்

குருவாயூர் கோயிலுக்கு நேற்று முன் தினம் மாலை நேரத் தீபாராதனை சமயத்தில் சென்றுள்ளார் துர்கா ஸ்டாலின். கோயிலுக்குச் சென்ற துர்கா ஸ்டாலினை தேவசம்போர்டு சேர்மன் மோகன் தாஸ், நிர்வாக குழு உறுப்பினர் கே.வி.ஷாஜி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மாலை நேர தீபாராதனையில் கலந்துகொண்ட துர்கா ஸ்டாலின் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். துர்கா ஸ்டாலின் பெயரில் கோயிலைச் சுற்றியுள்ள 'சுற்று விளக்கு'களில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக குருவாயூர் கோயிலுக்கு 40,000 ரூபாய் ஏற்கெனவே செலுத்தி ரசீது பெறப்பட்டிருந்தது.

சுற்று விளக்கு நேர்ச்சையைத் தொடர்ந்து துலாபாரம் நேர்ச்சை செலுத்தி துர்கா ஸ்டலின் வழிபாடு நடத்தினார். தன் எடைக்கு எடை சர்க்கரை மற்றும் கோயிலின் மணிக்கிணற்றில் உள்ள தீர்த்தமும் துலாபாரம் நேர்ச்சையாகச் செலுத்தினார் துர்கா ஸ்டாலின். துலாபாரம் நேர்ச்சைக்காக குருவாயூர் கோயில் கவுண்டரில் 9,200 ரூபாய் துர்கா ஸ்டாலின் சார்பில் செலுத்தப்பட்டது. துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலில் துலாபாரம் நடத்தி வழிபாடு செய்ததை அங்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Also Read: துர்கா ஸ்டாலின் எனும் நான்... குடும்பம் முதல் அரசியல் வரை - மனம் திறக்கும் முதல்வரின் மனைவி



from தேசிய செய்திகள் https://ift.tt/3e3dQy2

No comments