Breaking News

கென் - பெட்வா நதிநீர் இணைப்பு: உ.பி. தேர்தலும், உருவாகும் சூழலியல்கேடுகளும்?! - ஒரு பார்வை

உத்தரப்பிரதேசத்திலிருக்கும் கென் நதியையும், மத்தியப்பிரதேசத்திலிருக்கும் பெட்வா நதியையையும் இணைக்கும், `கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு' மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த ஆண்டு உ.பி. தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது பா.ஜ.க அரசு. இந்தியாவின் முதல் மிகப்பெரிய நதிநீர் இணைப்புத்திட்டம் என பெருமைகொள்ளப்பட்டாலும், இதனால் ஏற்படவிருக்கும் சூழலியல் பிரச்னைகள், மீட்டெடுக்க முடியாத பேரழிவுகளை ஏற்படுத்தும் என சூழலியல் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

மோடி

இந்தியாவில் நதிநீர் இணைப்பு என்பது 40 ஆண்டுகளைக் கடந்த கனவுத்திட்டம். 1980-ம் ஆண்டே அப்போதைய இந்திய அரசால், தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்துக்கு அடித்தளமிடப்பட்டது. அதன்படி, இமயமலையின் 14 நதிகளையும், தென் தீபகற்பத்தின் 16 நதிகளையும் இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மிகப்பெரிய அளவிலான நிதித்தேவை, மாநில அரசுகளுக்கிடையேயான முரண்பாடு, சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல், சூழலியலாளர்களின் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இருப்பினும், அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வருவதும், அவை செயல்பாட்டுக்கு வராமல் அறிவிப்போடு நின்றுபோய்விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, நதிநீர் இணைப்பு திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 2015-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசியநதிநீர் இணைப்புத் திட்டத்துக்கான சிறப்புக் குழு 5-வது கூட்டத்தில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சன்வர் லால் ஜாட், ``தேசம் முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதற்காக, தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த பா.ஜ.க அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த மெகா திட்டத்தின் மூலம் நீண்டகால அடிப்படையில் நாட்டின் நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், முதல்கட்டமாக, கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் வனத்துறை தொடர்பான பல்வேறு அமைப்புகளிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது" என அறிவித்தார்.

சன்வர் லால் ஜாட்

இந்த நிலையில், கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கடந்த 2021 மார்ச் 22-ம் தேதி மத்திய அரசுக்கும், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் மாநிலங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 8-ம் தேதி, மோடி தலைமையிலான கேபினட் அமைச்சரவை, கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது.

உ.பி. - ம.பி. வரைபடம்

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, ``ஆண்டுக்கு 10.62 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதிபெறும், சுமார் 62 லட்சம் மக்களுக்கு குடிநீர்வசதி கிடைக்கும், 103 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மற்றும் 27 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும்” என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலும், ``உத்தரப்பிரதேச மாநிலத்தின் பண்டா (Banda), மஹோபா (Mahoba), ஜான்சி (Jhansi), லலித்பூர் (Lalitpur) ஆகிய நான்கு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தின் பன்னா (Panna), திகம்கர் (Tikamgarh), சத்தர்பூர் (Chhatarpur), சாகர் (Sagar), டாமோஹ் (Damoh), தாதியா (Datia), விதிஷா (Vidisha), ஷிவ்புரி (Shivpuri), ரைசன் (Raisen) ஆகிய ஒன்பது மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 13 மாவட்டங்கள் பயனடையும் என மத்திய அரசு கூறுகிறது.

Also Read: உத்தரப்பிரதேசம்: மோடியின் வாரணாசி விசிட்... `பூர்வாஞ்சல்’ கணக்கு?! - ஓர் அரசியல் பார்வை

ஆனால், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்தத் திட்டத்தை `பேரழிவு' என எச்சரிக்கின்றனர். இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ``கென் - பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தின்மூலம் கென் நதியிலிருந்து உபரி நீரை பெட்வா நதிக்கு கொண்டுசெல்வதாகக் கூறுகின்றனர். முதலில், இந்தியாவில் உள்ள எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என தேசிய நீர்வளத்துறையே கூறியிருக்கிறது. இந்த கென், பெட்வா நதிகள் வேறுவேறு திசைகளில், இருவேறு மாநிலங்களில் பயணித்தாலும் அவை ஒரே இடத்தில்தான் உருவாகின்றன. எனவே, அதிகமாக மழைபெய்யும்போது இருநதிகளிலும் வெள்ளம் ஏற்படும், வறட்சியின்போது இருநதிகளிலும் தண்ணீர் இல்லாமல்தான் போகும். உண்மைநிலை இப்படி இருக்கும்போது, இந்ததிட்டத்தால் அரசு எதிர்பார்க்கும் எவ்வித நன்மைகள் அந்தப் பகுதிமக்களுக்குப்போய் சேராது. மாறாக மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்னைகள்தான் ஏற்படும்" என்றார்.

சுந்தர்ராஜன்

எந்தமாதிரியான பிரச்னைகள் ஏற்படும் எனக் கேட்டபோது, ``இந்த நதிநீர் இணைப்பின் முக்கிய அங்கமாக, டௌதான் (Daudhan) என்ற பகுதியில் மிகப்பெரிய அணைகட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அணை அமையவிருக்கும் பகுதி `பன்னா தேசிய புலிகள் காப்பகத்தின்' பரப்பளவுக்குள் வருகிறது. தேசிய நீர்வள அமைப்பின் கணக்குப்படி, அணை கட்டுமானப்பணிகளுக்காக சுமார் 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும் வாய்ப்பிருக்கிறது. மேலும், 9,000 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது. இதனால், புலிகள் உட்பட பல அரிய உயிரினங்கள் பெருமளவு உயிரிழக்கக்கூடும்" என்று கூறினார்.

பன்னா தேசிய புலிகள் காப்பகம்

மேலும், ``ஒருபக்கம் அரசாங்கம் Project Tiger எனும் பெயரில் புலிகளைப் பாதுகாக்க, அதன் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாக கூறிவருகிறது. மறுபக்கம் அதன் வாழ்விடங்களை அழிக்கும்வகையில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. உண்மையில், இந்த திட்டத்தால் எந்தவித சமூக-பொருளாதார முன்னேற்றங்களும் ஏற்படப்போவதில்லை. இந்த திட்டத்தை 44 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்போவதாகக் கூறுகிறார்கள், அந்த தொகையில் வெறும் 10% தொகையை செலவழித்து அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகள், குளம், ஏரிகளை சரிசெய்து, பெருமளவிலான மரங்களை நட்டு பராமரித்தாலே அரசுசொல்லும் அனைத்து பலன்களும் மக்களுக்கு கிடைத்துவிடும். இந்த திட்டம் ஒப்பந்தக்காரர்களுக்கானதே தவிர மக்களுக்கானது அல்ல. மேலும், வரவிருக்கும் உத்தரப்பிரதேச தேர்தலை முன்வைத்துதான் இப்போது மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்புகாட்டி வருகிறது" என்றார் சுந்தர்ராஜன்.

Also Read: உத்தரப்பிரதேசம்: `பெண்கள், இளைஞர்கள் டார்கெட்’ - வாக்குறுதிகளில் கவனம் ஈர்க்கிறாரா பிரியங்கா காந்தி?



from தேசிய செய்திகள் https://ift.tt/3Fbecys

No comments