Breaking News

கறுப்பு நிற காருக்கு மாறிய கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பாதுகாப்பு காரணமா?!

கேரள மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார் பினராயி விஜயன். கேரளாவில் முதல் அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் வெள்ளை நிற காரையே பயன்படுத்தி வந்தனர். முதல்வர் பினராயி விஜயன் கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை நிற இன்னோவா காரை பயன்படுத்தி வந்தார். கேரளாவில் முதல்வர் காருக்கு 1-ம் எண்ணும், சீனியாரிட்டிபடி அமைச்சர்கள் காருக்கு தனித்தனி நம்பரும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில்தான் இதற்கு முன் டி.ஜி.பி-யாக இருந்த லோக்நாத் பெகரா பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வர் கறுப்பு நிற காரில் பயணிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதையடுத்து முதல்வரின் பழைய நான்கு கார்களை மாற்றிவிட்டு புதிதாக நான்கு கார்கள் வாங்குவது பற்றி பரிசீலிகப்பட்டது.

பினராயி விஜயன்

கறுப்பு நிற இன்னோவா கிரிஸ்டா கார்கள் மூன்றும், ஒரு டாடா ஹாரியர் கார் என நான்கு கார்களை வாங்குவதற்காக கேரள பொதுப்பணித்துறை ரூ.62.46 லட்சம் ஒதுக்கீடு செய்தது. கடந்த வாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் பயணிப்பதற்கான கறுப்புநிற இன்னோவா கிரிஸ்டா கார் தயார் நிலையில் திருவனந்தபுரம் வந்தது. முன்பக்கமும், பின்பக்கமும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் புதிய கார் அமைந்துள்ளது.

பாலக்காடு மாவட்ட சி.பி.எம் மாநாட்டை முடித்து நேற்று திருவனந்தபுரம் வந்த முதல்வர் பினராயி விஜயனை அழைக்க கறுப்பு இன்னோவா கார் சென்றது. விமான நிலையத்தில் இருந்து சி.பி.எம் அலுவலகமாக ஏ.கே.ஜி செண்டருக்கு முதல் பயணத்தை அமைத்துக்கொண்டார் பினராயி விஜயன். பினராயி விஜயனின் காரை தவிர பைலட் வாகனம் உள்ளிட்ட மற்ற கார்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே உள்ளன.

முதல்வர் பினராயி விஜயனின் கறுப்பு நர கார்

இனி பாதுகாப்பு வாகனங்களும் கறுப்பு நிறத்தில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கறுப்பு நிற காரில் பயணிப்பதால் இரவு நேரத்தில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி பயணிக்க புதிய கார் வாங்கப்பட்ட நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் காரை மாற்றியிருப்பது கவனம் பெற்றுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/32PrEKt

No comments