துபாயிலிருந்து வந்த உத்தரவு; கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.14.70 கோடி பணம்; 4 பேர் சிக்கிய பின்னணி!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட சின்னகோவிந்தம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில், 29-ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில், எஸ்.ஐ பாஸ்கர் மற்றும் முதல்நிலைக் காவலர் பிரேம் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் மார்க்கத்தில், 4 பேர் கும்பல் ஒரு காரிலிருந்து லாரியின் கேபின் பகுதிக்கு ஏதோ பண்டல்களை அவசர அவசரமாக ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த காவலர்கள் இருவரும், அந்தக் கும்பல் அருகே சென்று விசாரிக்கத் தொடங்கினர். பெயர், முகவரியைத் தெரிவிக்க மறுத்த அந்த கும்பல், காவலர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து விரட்டியடிக்க முயன்றனர். இதையடுத்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதால் கூடுதல் காவலர்கள் அங்கு விரைந்துச் சென்று 4 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த நிசார்அகமது, மதுரை அங்காடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வசிம்அக்ரம், கேரள மாநிலம் கோழிக்கோடு வல்லக்காடு மலைப்பகுதியைச் சேர்ந்த ஷர்புதின், அப்துல்நாசர் ஆகியோர்தான் பிடிபட்டவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ஹூண்டாய் ஐ10 கார் மற்றும் அசோக் லேலண்ட் லாரியையும் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த 20 பண்டல்கள் மற்றும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மேலும் 28 பண்டல்கள் என மொத்தமாக 48 பண்டல்களையும் கைப்பற்றி, காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்தனர். பண்டல்களைப் பிரித்து பார்த்தபோது, அவற்றில் 2000, 500, 200, 100 ரூபாய் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை 3 இயந்திரங்களைக் கொண்டு காவலர்களே எண்ணினர். மொத்தம் 14,70,85,400 ரூபாய் பணம் இருந்தது.
இவ்வளவுப் பணமும் ‘ஹவாலா’ மூலம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்படுவதற்காக கொண்டுச் செல்லப்பட்டதா அல்லது வருமான வரித்துறையினரிடம் கணக்கில் காட்டாத கறுப்புப் பணமா என்ற கோணத்தில் பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சென்னையிலிருந்து கார் மூலம் அந்தப் பணம் கேரளாவுக்கு கடத்தப்பட்டிருப்பதும், ஒரே வாகனத்தில் சென்றால் வழியில் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் வேலூர் அருகே லாரியில் பணத்தை மாற்றி தார்ப்பாயைக் கொண்டு மறைத்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட கும்பலில் ஒருவரான நிசார்அகமது, சென்னையில் புர்கா கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருக்கும் ரியாஸ் என்பவர் சென்னையிலிருந்து அந்தப் பணத்தை கேரளாவுக்கு கடத்திச் செல்ல நிசார் அகமதுவுக்கு உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார். துபாயில் வசிக்கும் ரியாஸ், நிசார்அகமதுவின் தந்தைக்கு நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. இந்த பழக்கத்தில்தான் நிசார்அகமது கடத்தலுக்கு துணைப் போகியிருக்கிறார். இவருடன் சிக்கிய மற்ற 3 பேரும் கார் மற்றும் லாரி ஓட்டுநர்களாக உதவிக்கு வந்திருக்கிறார்கள். இவை, முதற்கட்ட தகவல்களாக வெளிவந்திருக்கின்றன. ஆனாலும், இவ்வளவுப் பெரியத் தொகை எங்கிருந்து அவர்களுக்குக் கிடைத்தது? எதற்காக மறைத்து கடத்தப்பட்டது? இதன் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கிறது? யார் யார் இருக்கிறார்கள்? தடைச் செய்யப்பட்ட அமைப்பின் தொடர்பிருக்கிறதா? என்ற சந்தேகத்துக்குரிய பல்வேறு கேள்விகளுடன் விசாரணையையும் தீவிரப்படுத்தியிருக்கிறது வேலூர் மாவட்ட காவல்துறை.
from தேசிய செய்திகள் https://ift.tt/s74jaCY
Post Comment
No comments