கால்வாய் பணியின்போது குழாய் உடைப்பு; தாம்பரத்துக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு: முடிச்சூர் சாலையில் ஆறாக ஓடி வீணாகும் நீர்
தாம்பரம்: முடிச்சூரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்து வரும் மூடுகால்வாய் அமைக்கும் பணியின்போது தாம்பரம் மாநகராட்சி பாலாற்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிச்சூரில் சீக்கனா ஏரியின் உபரிநீர் மற்றும் அமுதம் நகரில் வெளியேறும் மழை நீரை நேரடியாக அடையார் ஆற்றில் இணைக்கும் வகையில் 1.75 மீட்டர் தூரம் ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாதாள மூடு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தாம்பரம் மாநகராட்சிக்கு பாலாற்றில் இருந்து குழாய் மூலம்குடிநீர் விநியோகம் செய்யப்படும் குழாய் முடிச்சூர் சாலையில் செல்கிறது. இந்நிலையில் குழாய்இருப்பதை கவனிக்காத நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணியாளர்கள் குழாயை உடைத்துள்ளனர். இதனால், சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும் தாம்பரம் பகுதிக்கு குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் பணிகளை தொடங்கும் முன் மின்வாரியம், உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புகளிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பணி செய்வதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZfXubM8
via
No comments