Breaking News

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் திறக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொங்கல் பண்டிகைக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடர்பாக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். முதல்கட்டமாக, வரைபடங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து, நேரடியாக சென்று கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டனர். மேலும், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

இதுகுறித்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் 88 ஏக்கர் பரப்பில், ரூ.315 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை விரைந்து முடிக்குமாறு, ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்துகிறார். இதுகுறித்து முதல்வர் நேற்று முன்தினம் என்னிடம் கேட்டபோது, பிப்ரவரி மாதத்துக்குள் பணி முடிக்கப்படும் என்றேன். ஆனால், 60 நாட்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தற்போது 82 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே, பொங்கல்பண்டிகைக்குள் பணிகளை முடித்து, பேருந்து நிலையத்தைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/m8MLXEx
via

No comments