கழட்டிவிட்ட சிஎஸ்கே - விஜய் ஹசாரே தொடரில் கோலியின் சாதனையை சமன்செய்த ஜெகதீசன்
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் தொடரில், 4 சதங்கள் விளாசி, இந்திய அணியின் முன்னாள் வீரர் விராட் கோலியின் சாதனையை தமிழக வீரர் நாரயண் ஜெகதீசன் சமன் செய்துள்ளார்.
லிஸ்ட் ஏ எனப்படும் முதல்தர கிரிக்கெட் போட்டியான 2022-2023 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பையின் 21-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடக மாநிலம் அலூரில் இன்று நடைபெற்ற அரியானாவுக்கு எதிரானப் போட்டியில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 123 பந்துகளில் 128 ரன்கள் அடித்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை தமிழக வீரர் நாரயண் ஜெகதீசன் சமன் செய்துள்ளார்.
கடந்த 2008-2009 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பையின் 7-வது சீசனில், மொத்தம் 7 போட்டிகளில் 102, 119*, 124, மற்றும் 114 என 4 சதங்கள் விளாசி மொத்தம் 534 ரன்கள் எடுத்திருந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இந்த வரிசையில் விராட் கோலிக்குப் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் சாதித்த நிலையில் 5-வது வீரராக நாரயண் ஜெகதீசன் இணைந்துள்ளார்.
அதேபோல், லிஸ்ட ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக (four consecutive centuries) 4 சதங்கள் விளாசிய வீரர்களான இலங்கையை சேர்ந்த குமாரா சங்ககரா, தென்னாப்பிரிக்காவின் ஆல்வீரோ பீட்டர்சன், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் வரிசையில் 4-வது வீரராக தமிழக வீரர் நாரயண் ஜெகதீசன் இணைந்துள்ளார். ஜெகதீசனின் இந்த அதிரடியால் அரியானாவுக்கு எதிரானப் போட்டியில் தமிழக அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
விக்கெட் கீப்பரும் வலதுகை பேட்ஸ்மேனுமான ஜெகதீசன், தற்போதைய விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் மொத்தம் 522 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 168 ஆகும். பீகாருக்கு எதிரான முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஆந்திரா (114*), சத்தீஸ்கர் (107), கோவா (168)அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்கள் விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன், 16-வது சீசன் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, வருகிற டிசம்பர் மாதம் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டநிலையில் இந்த சாதனையை செய்து தன்னை நிரூபித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/dIMJB9c
via
No comments