Breaking News

சிக்சர்களாக வெளுத்த அக்சர்; பயமுறுத்திய சூர்யா - இறுதியில் போராடி வெற்றிப்பெற்ற இலங்கை

புனேவில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி, கடந்த 3ஆம் தேதி மும்பையைல் நடைபெற்ற முதல் போட்டியில் 2 ரன்களில் திரில் வெற்றிபெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது போட்டி இரவு 7 மணிக்கு புனேவில் தொடங்கியது.

image

இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் ஹர்சல் படேல் நீக்கப்பட்டு, ராகுல் திரிபாதி மற்றும் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. அவ்வணியில் கேப்டன் தசூன் சனகா அதிரடியாய் விளையாடி 22 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் அதிகபட்சமாய் அவர் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து மென்டிஸ் (52 ரன்கள்), நிசாங்கே (33 ரன்கள்), அசலங்கா (37 ரன்கள்) ஆகியோரும் இந்திய அணியின் பந்துவீச்சைச் சிதறடித்து இலங்கை அணி 200 ரன்களைக் கடக்க உதவினர். இந்திய அணி தரப்பில், மாலிக் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அக்ஷர் 2 விக்கெட்டும் சாஹல் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

image

பின்னர், 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்த இஷான் கிஷன் இன்றைய போட்டியில் 2 ரன்களில் நடையைக் கட்டினார். அவர், காசுன் ராஜிதா பந்துவீச்சில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அதுபோல் மற்றொரு தொடக்க பேட்டரான சுப்மான் கில்லும் நீண்டநேரம் நிற்கவில்லை. அவர் 5 ரன்களில் அதே ராஜிதா பந்துவீச்சில் தீக்ஷனாவிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். அதற்கடுத்து இன்றைய போட்டியில் களமிறங்கிய ராகுல் திரிபாதியும் ஒரு பவுண்டரியுடன் மேலும் ஒரு ரன் சேர்த்த வகையில் மதுசங்கா பந்துவீச்சில் மென்டிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

image

அவர்களைத் தொடர்ந்து கேப்டன் பாண்டியாவும் தன் பங்குக்கு 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்து 12 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இன்றைய ஆட்டத்தில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவேண்டும் என்ற எண்ணமில்லாமல், எல்லோரும் சொல்லிவைத்தாற்போல சீட்டுக்கட்டாய்ச் சரிந்தனர். 5 ஓவர்களில் இந்திய அணி 34 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்திருந்தது. ஆனால், இலங்கை 8வது ஓவரில்தான் தன்னுடைய முதல் விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது அந்த அணி 80 ரன்கள் எடுத்திருந்தது. கடந்த போட்டியில் 41 ரன்கள் எடுத்த தீபக் ஹூடாவும் இன்றைய போட்டியில் சோபிக்கத் தவறினார். அவர் 9 ரன்களில் அவுட்டானார்.

image

பரிதாப நிலையில் இருந்த இந்திய அணியை சூர்யகுமார் யாதவும், அக்ஷர் படேலும் ஓரளவு நிலைத்து நின்று சரிவிலிருந்து மீட்டனர். குறிப்பாக அக்சர் படேல், ஹசரங்கா வீசிய 13வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்ர் அடித்து ரசிகர்களைக் குஷிபடுத்தினார். அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவும் ஒரு சிக்ஸர் அடித்தார். அக்சர் படேல் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு இது, 2வது அரைசதம் ஆகும். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் 33 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக இருந்தது. எனினும் ஷிவம் மாவி அதிரடி சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசினார்.

இறுதி ஓவரில் அக்சர் படேல் அவுட்டானார். அவர் 31 பந்துகளில் 65 ரன்களை விளாசி இருந்தார் அதில் மொத்தம் 6 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து 16 ரன்களில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/xleMZqa
via

No comments