Breaking News

'அடுத்த வாரம் தொடங்கும் புதிய தாக்குதல்?' - கிழக்கு உக்ரைனில் ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா

நேட்டோ படையில் இணைவதற்கு உக்ரைன் முனைப்பு காட்டியது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. இதையடுத்து ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வருவது, ரஷ்யாவை மேலும் எரிச்சலூட்டியது. இதையடுத்து ராணுவ நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

புதின்

அதன் ஒருபகுதியாக அடுத்த வாரம் முதல் புதிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கும் ரஷ்யா, அதற்கு தேவையான ஆயுதங்களை கிழக்கு உக்ரைனில் குவித்து வருகிறது. போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையிலும், மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவிகள் உக்ரைனுக்கு வந்து சேரும் என்ற காரணத்தினாலும் ரஷ்யாவால் ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கிறது.

இதை ரஷ்யா தொடர்ந்து "ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று அழைக்கிறது. மறுபுறம் தான் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உக்ரைனும் பதில் தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்காக அந்த நாடு மேற்கத்திய நாடுகள் வழங்குவதாக அறிவித்த நீண்ட தூரம் சென்று இலக்குகளை தாக்கும் தன்மை கொண்ட ஏவுகணைகள் மற்றும் போர் டாங்கிகள் பெறுவதற்காக காத்திருக்கிறது. இதற்கு சில மாதங்கள் ஆகும் என கருத்து தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ரஷ்யா - உக்ரைன் போர்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் உக்ரைனில் இருக்கும் லுஹான்ஸ்க் மாகாணத்தின் கவர்னர் செர்ஹி ஹைடாய், "எங்கள் திசையில் அதிக அளவில் ரஷ்ய இருப்புக்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம். மேலும் உபகரணங்கள் கொண்டு வரப்படுவதை நாங்கள் காண்கிறோம். முன்பை விட வித்தியாசமாக பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை அவர்கள் கொண்டு வருகிறார்கள்.

இதன் மூலம் அவர்கள் இடைவிடாமல் 24 மணி நேரமும் தாக்குவதற்கு திட்டமிடவில்லை. மாறாக அவர்கள் மெல்ல, மெல்ல ஆயுதங்களை சேமிக்கத் தொடங்கி, முழு அளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். இருப்புகளைச் சேகரிக்க பெரும்பாலும் அவர்களுக்கு 10 நாள்கள் ஆகும். பிப்ரவரி 15-க்குப் பிறகு நாம் எந்த நேரத்திலும் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கலாம்" என்றார்.

ரஷ்யா அதிபர்

இதற்கிடையில் தொடர்ந்து ரஷ்யா முன்னேறி வருவதால் உக்ரைனின் ராணுவ அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தனது உரையில், "உள்ளூர் மற்றும் மத்திய அரசாங்கத்தில் ராணுவ மற்றும் நிர்வாக அனுபவத்தை இணைக்க விரும்புகிறேன்" என்றார்.

ஆனால் அவரின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் மாற்றப்படுவாரா என்பது குறித்த குழப்பத்தை நேரடியாக தீர்க்கவில்லை. ஜெலன்ஸ்கியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேவிட் அராகாமியா, "ரெஸ்னிகோவ் வேறொரு அமைச்சர் பணிக்கு மாற்றப்படுவார்" என்றார். பின்னர் அவர் "இந்த வாரம் பாதுகாப்புத் துறையில் பணியாளர்கள் மாற்றங்கள் எதுவும் இருக்காது" என்று தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் ரஷ்யா போர்

பின்னர் பேசிய ஜெலன்ஸ்கி, "உக்ரைன் பில்லியன் கணக்கான டாலர்கள் மேற்கத்திய ராணுவம் மற்றும் பிற உதவிகளின் பாதுகாப்பான பொறுப்பாளராக இருந்தேன் என்பதை ரெஸ்னிகோவ் உறுதி செய்ய வேண்டும். மேலும் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, அரசு மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக மாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறது.

பல பிராந்தியங்களில், குறிப்பாக எல்லையில் அல்லது முன் வரிசையில் இருக்கும் பகுதிகளில், தற்போதிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்களை மிகவும் திறம்படக் காட்டக்கூடிய ராணுவ அனுபவம் கொண்ட தலைவர்களை நாங்கள் நியமிப்போம்" என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. அவரின் பயணம் இந்த வாரம் இருக்கக்கூடும் என்ற செய்திகளுக்கு மத்தியில், படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அவரின் இரண்டாவதாக அறியப்பட்ட வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

மேலும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், "வார இறுதியில் ரஷ்யாவின் புதிய தாக்குதல் கிழக்கு அல்லது தெற்கில் இருந்து வரக்கூடும். விநியோகங்களைத் தொடர கிரிமியாவிற்கு நில வழித்தடத்தை விரிவுபடுத்துவதே அவர்களின் கனவு. எனவே, நிச்சயமாக முக்கிய ஆபத்துகள் கிழக்கு, தெற்கு, அதன் பிறகு வடக்கில் ஏற்படும்" என்றார்.

இதுதொடர்பாக உக்ரேனிய பாதுகாப்பு ஆய்வாளர் ஒலெக்சாண்டர் கோவலென்கோ, "ஒரு புதிய ரஷ்ய தாக்குதல் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதி, டொனெட்ஸ்க் பகுதி, சபோரிஜியா பகுதி, மரியுபோல் நகரம் மற்றும் துறைமுகம் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒன்றில் இருந்து வரலாம். கடந்த மே மாதம் ரஷ்யப் படைகளால் மரியுபோல் பகுதி கைப்பற்றப்பட்டது.

ரஷ்யா

இது புதிய தாக்குதலுக்கு துருப்புக்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுவருவதற்கு ரஷ்யர்களால் பயன்படுத்தப்படலாம். இது ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு ஒரு போக்குவரத்து மையமாக செயல்பட முடியும். உக்ரைனின் எதிர்த்தாக்குதல் எந்த நேரத்திலும் நடக்காது. உக்ரைனியப் படைகள் தற்காப்பு நிலைப்பாட்டை ஏடுக்கும்" என்றார்.

பல மாதங்களாக கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் முக்கிய இலக்கு பாக்முட் ஆகும், அங்கு வாக்னர் கூலிப்படை குழு காலூன்றிவிட்டது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யப் படைகள் டாங்கி, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்கு பயிற்சி அளித்ததாக உக்ரைன் திங்கள்கிழமை மாலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அடுத்த வாரம் முதல் புதிய தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



from India News https://ift.tt/BrcA4ks

No comments