Breaking News

பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானம் அருகே குண்டுவெடிப்பால் பரபரப்பு! - வீரர்களின் நிலை?

பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில், சமீபகாலமாக அங்கு நிகழும் குண்டு வெடிப்புச் சம்பவங்களும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கிரிக்கெட் லீக் போட்டிகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஆண்டுக்கானப் போட்டிகள் வரும் பிப்ரவரி 13 தொடங்க உள்ளன.

அதற்கு முன்னதாக இன்று, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஷல்மி அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி ஆட்டத்தின்போது, போட்டி நடைபெறும் நவாப் அக்பர் புக்தி மைதானத்துக்கு அருகே குண்டு வெடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

image

இங்கு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முன்னாள் வீரர் ஷஹீத் அஃப்ரிடி உள்ளிட்ட அந்நாட்டு வீரர்கள் பலரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போட்டி தொடங்கப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் காவல்துறை, “பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெறும் திடலின் அருகே நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர், நிலைமை சீரான பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஏ-தலிபான் பொறுப்பேற்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/NY5KC81
via

No comments