Breaking News

``பினராயி விஜயனுக்கு எதிரான ஆதாரங்களை ஒப்படைக்க ரூ.30 கோடி பேரம்” - ஸ்வப்னா சுரேஷ் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் சிக்கியவர் ஸ்வப்னா சுரேஷ். இவருடன் கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர், ஸ்வப்னாவின் நண்பர் ஸரித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஸ்வப்னாவும், சிவசங்கரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் லைஃப் மிஷன் என்ற அரசின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் வசித்துவருகிறார். இந்த நிலையில் ஃபேஸ்புக் மூலம் சில முக்கிய தகவல்களை வெளியிடுவதாக பெங்களூரில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் நேற்று கூறியிருந்தார். அதன்படி நேற்று மாலை ஃபேஸ்புக் லைவில் பேசிய ஸ்வப்னா சுரேஷ், "கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி காலை 10.37 மணிக்கு எனக்கு முதலில் ஒரு போன் வந்தது. அது எனக்கு தெரியாத எண் என்பதால் அந்த சமயத்தில் போன் எடுக்கவில்லை. தொடர்ந்து எனக்கு அதே எண்ணில் இருந்து போன் வந்தது. அவர் பெயர் விஜய் பிள்ளை எனவும், யாக்‌ஷன் என்ற ஓ.டி.டி சி.இ.ஓ என என்னிடம் சினிமா குறித்து சில விஷயங்கள் பேச உள்ளதாகவும், அதற்காக நேரில் பார்க்க வேண்டும் என கூறினார். அதன் அடிப்படையில் அவரை பார்க்க நான் சம்மதித்தேன்.

ஸ்வப்னா சுரேஷ் - சிவசங்கர்

`வீட்டுக்கு வந்து பேசலாமா?’ எனக்கேட்டனர். நான் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை வீட்டில் சந்திப்பது இல்லை எனக்கூறி `ஓட்டலில் சந்திக்கலாம்’ என்றேன். `வழக்கு இருப்பதால் பெங்களூரில் பயணம் செய்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். எனவே உங்கள் பகுதியில் ஒரு ஓட்டலை நீங்களே சொல்லுங்கள்’ என்றார். `பயணம் செய்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நீங்களே ஒரு ஓட்டலை சொல்லுங்கள்’ என்றேன். அதன்படி சூரி என்ற ஓட்டல் லொக்கேஷன் அனுப்பினார்கள். அங்கு எங்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, எனது வாழ்க்கை குறித்து சினிமாவுக்காக வீடியோ ஷூட் செய்ய வேண்டும் என்றார் விஜய் பிள்ளை. மேலும், தனக்கு சில தொழில் அதிபர்களுடன் தொடர்பு உண்டு எனக்கூறிய விஜய் பிள்ளை தொடர்ந்து எனது வழக்கு குறித்து சமரசம் பேசினார்.

முதல்வர் பினராயி விஜயனுக்கும், அவரின் மனைவி கமலா, மகள் வீணா ஆகியோருக்கும் எதிராக உள்ள ஆதாரங்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இதற்காக ரூ. 30 கோடி வரை தருவதாக சொன்னார். அதுமட்டுமல்லாது பெங்களூரில் இருந்து ஜெய்ப்பூர் அல்லது ஹரியானாவுக்கு சென்றுவிடவேண்டும் எனவும், அதற்கு அவர் உதவுவதாகவும் சொன்னார். கேரளாவின் ஆளும் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் கூறியதால் தான் சமரசத்துக்காக பேசுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆதாரங்கள் கூகுள் கிளவுடில் இருந்தால் அதன் பாஸ்வேர்டு உள்ளிட்டவைகளை கொடுத்துவிட வேண்டும் எனவும். அதை நாங்களே அழித்துக்கொள்வோம் எனவும் கூறினார்.

ஃபேஸ்புக் லைவில் பேசிய ஸ்வப்னா சுரேஷ்

முடிவு எடுக்க இரண்டு நாட்கள் கால அவகாசம் தருவதாகவும். சாதகமான முடிவு எடுக்காமல் இருந்தால் கொலை செய்வதாகவும் விஜய் பிள்ளை மிரட்டினார். அதுமட்டுமல்லாது, `தொழில் அதிபர் யூசப் அலிக்கு விமான நிலையங்களில் நிறைய அதிகாரம் உண்டு. நீங்கள் விமானத்தில் செல்லும் சமயத்தில் உங்கள் பேக்கில் போதைப்பொருட்களை வைத்து கைது செய்து மூன்று வருடம் சிறைக்கு அனுப்பிவிடுவோம்’ எனவும் மிரட்டினார். ஆனால் நான் அந்த சமரசத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்த ஆதாரங்களை கர்நாடக டி.ஜி.பி-க்கும், அமலாக்கத்துறைக்கும் அளித்துள்ளேன்" என ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். ஸ்வப்னா சுரேஷ் கூறிய விஜய் பிள்ளையின் உண்மையான பெயர் விஜேஷ் பிள்ளை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் கொச்சியில் ஒரு நிறுவனம் நடத்திவந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



from India News https://ift.tt/7pq9Yfi

No comments