”நல்லவேளை கே.எல்.ராகுல் இந்த பிட்ச்ல விளையாடல”- சுவாரசியமாக பதில் சொன்ன சீக்கா!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், கே.எல்.ராகுல் 3ஆவது போட்டியில் விளையாடாதது குறித்து சுவாரசியமான பதிலை கூறியுள்ளார் முன்னாள் இந்திய அதிரடி வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுலை விலக்கியது குறித்து பேசியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ராகுலுக்கு அளிக்கப்பட்ட ஓய்வு அவருக்கும், அவருடைய கேரியருக்கும் நல்லதாகவே அமைந்ததாக கூறியுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியானது, இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்தூர் ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களை கூட பெறமுடியாமல் 109 ரன்னுக்கும், 163 ரன்னுக்கும் ஆல் அவுட்டானது. வெறும் 76 ரன்களை துறத்திய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் பேட்டர்களில் புஜாராவை தவிர எந்த வீரரும் சரியாக செயல்படவில்லை, கேஎல் ராகுலுக்கு பதிலாக அணிக்குள் கொண்டுவரப்பட்ட சுப்மன் கில்லும் 21 மற்றும் 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரன்களை சேர்க்க தடுமாறிய இந்திய அணியின் ஓபனிங் பேட்டரான கேஎல் ராகுல், 3ஆவது போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். இந்நிலையில் கேஎல் ராகுல், 3ஆவது போட்டியில் விளையாடதது குறித்து பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பேட்ஸ்மேன்கள் விளையாடவதற்கு கடினமான இந்த ஆடுகளத்தில், ஒருவேளை ராகுல் விளையாடி இருந்தால், அதற்கும் அவரை குறைசொல்லியிருப்பார்கள் என்றும், அது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையையே பாதித்திருக்கும் என்று கூறியுள்ளார்.
ராகுல் குறித்து பேசியிருக்கும் சீக்கா, "முதலில், கே.எல். ராகுலுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிர்ஷ்டவசமாக, 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடாமல் போனது நல்லதாகவே அமைந்தது. ஒருவேளை அவர் இதுபோன்ற மோசமான விக்கெட்டுகளில் விளையாடி, அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தால், அவருடைய கிரிக்கெட் எதிர்காலமே முடிந்து போயிருக்கும். வெளிப்படையாகச் சொன்னால், கடவுளுக்கு நன்றி, அவர் விளையாடவில்லை" என்று அவர் தனது யூடியூப் சேனலான சீக்கி சீக்காவில் கூறினார்.
பிட்ச் பற்றி பேசிய சீக்கா, இதுபோன்ற ஆடுகளங்களில் எந்தவொரு பேட்ஸ்மேனும் சுதந்திரமாக ஸ்கோர் செய்வது கடினம் என்று கூறினார். ஆடுகளம் குறித்து பேசிய அவர், "இந்த ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. யாராக இருந்தாலும் சரி, அது விராட் கோலியாக இருக்கட்டும், இல்லை வேறு வீரராக இருக்கட்டும், இந்த பிட்ச்களில் யாராலும் ரன் குவிக்க முடியாது. நீங்கள் முதல் இன்னிங்ஸை பாருங்கள், குஹ்னேமன் பந்துவீசுகிறார் அவருடைய பந்தானது பிட்சிலிருந்து கிட்டத்தட்ட சதுரமாக திரும்புகிறது. இது போன்ற பிட்ச்களில் எல்லாம் ரன்களை எடுப்பது அனைத்து பேட்டர்களுக்கும் கடினமானதாகவே இருக்கும் ” என்று கூறினார்.
மேலும் விக்கெட் எடுப்பது குறித்து பேசிய அவர், "இந்த விக்கெட்டுகளில் விக்கெட் எடுப்பது பெரிய விஷயம் இல்லை, பேட்டிங் செய்வது தான் கடினம். நான் பந்துவீசியிருந்தாலும் கூட விக்கெட்டுகளை எடுத்திருப்பேன். இவை அனைத்தும் கடினமான பேச்சுகள், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்" என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/e2BwUFi
via
No comments