``தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மறைமுக ஒப்பந்தம்... நாடகம் நடக்கிறது" - சி.வி.சண்முகம் சாடல்
விழுப்புரம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் துவக்க விழாவில் நேற்றைய தினம் கலந்து கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், "ஸ்டாலின் தலைமையிலான இந்த திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் போதை களமாக மாறி இருக்கிறது. எங்கே பார்த்தாலும் போதை. டாஸ்மார்க் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கஞ்சா அனைத்து பகுதிகளிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம், விலை மதிப்பில்லாத இளைஞர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும், அனைத்து பொதுமக்களும் கோரிக்கை வைத்தார்கள்.
அதனை காதில் வாங்காமல், காலதாமதம் செய்து கொண்டு, வேறு வழியில்லாமல் அரைவேக்காடு தனமாக ஒரு சட்டத்தை இயற்றி, எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகளை முழுமையாக கேட்காமல்... இந்த சட்டத்தை இயற்றக் கூடாது என்று திட்டமிட்டே இந்த அரசு செயல்பட்டது என இப்போது தெரிகிறது. அரைவேக்காடு தனமாக ஒரு சட்டத்தை இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி, ஆளுநர் அதற்கு காலதாமதம் செய்து திருப்பி அனுப்புகிறார். ஏதோ... இந்த அரசும், ஆளுநரும் மறைமுகமாக தங்களுக்குள்ளே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்படுவதாக தெரிகிறது. நீ அனுப்புவது போல அனுப்பு... நான் காலதாமதம் செய்வது போல செய்கிறேன்..! அதாவது, 'நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழுவது போல அழுகிறேன்' என்று நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு பக்கம் ஆளுநரை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, மறுபக்கம்... தானும், தன் பிள்ளையும் ஆளுநருடனே அமர்ந்து ருசித்து சாப்பிடுகின்றவர் தமிழக முதலமைச்சர். ஒரு சட்டத்தை ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு அருகதையற்ற ஒரு முதலமைச்சராக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சட்ட ஒழுங்கை காப்பாற்ற தகுதி இல்லாதவர் அவர்.
வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து பணி செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களை காப்பாற்ற முடியாத ஒரு முதல்வர், அதனை மறைப்பதற்காக.... 'அரசை கலைக்க சதி செய்வதாக' ஒரு குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டு வருகிறார்" என்றார் காட்டமாக.
from India News https://ift.tt/l79Lqaf
No comments