``ஈரோட்டில் வாக்காளர்களையே பார்க்க முடியவில்லை" - எடப்பாடி பழனிசாமி வேதனை
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``திரிபுரா, நாகலாந்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணநாயகம் தான் வென்றுள்ளது. தேர்தல் அறிவித்தத் தேதி தொடங்கி வாக்காளர்களுக்கு பணமழை பொழிந்தனர்.
30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், 21 மாத ஆட்சியில் சம்பாதித்த பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்து ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்காது. அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். தமிழகத்தில் இதற்கு முன்பு பல இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. எங்கும் இப்படிப்பட்ட விதிமீறல்கள் நடக்கவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் தான்.
இந்தத் தேர்தலை வைத்துக் கொண்டு திமுக மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.
தினம் காலை மக்களை ஆடுகளை அடைத்து வைப்பது போல பட்டிக்கும், சுற்றுலாவுக்கும் அழைத்து செல்வதால், எங்களால் வாக்காளர்களையே பார்க்க முடியவில்லை. மக்களை சுயமாக வாக்களிக்க விடவில்லை. வாக்காளர்களை பார்த்தால் தானே வாக்கு கேட்க முடியும். வாக்காளர்களை அபகரித்துதான் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
இதை ஒரு அதிசயமான தேர்தலாகத்தான் பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை. இப்படி ஒரு தேர்தல் நடப்பது ஜனநாயகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.” என்றார்.
from India News https://ift.tt/Gq5ex63
No comments