Breaking News

``அதிகாரம் வந்தவுடன் வந்தவழியைத் திரும்பிப் பார்க்கவில்லை" - கெலாட்டை விமர்சித்த சச்சின் பைலட்!

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கட்சிக்குள்ளேயே மோதல் நிலவி வருகிறது. கடந்த வாரம், பா.ஜ.க ஆட்சியில் நடந்த ஊழல்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்று, அசோக் கெலாட்டுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் சச்சின்.

கெலாட் Vs பைலட்

இன்றுகூட மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்களுடனான சந்திப்புக்குச் செல்லாமல் ஜெய்ப்பூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குச் சென்றார் சச்சின் பைலட். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு, ``நான் இங்குள்ள எந்தவொரு நபருக்கோ, காங்கிரஸ் அரசுக்கோ எதிரானவன் அல்ல" எனச் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிலையில் சச்சின் பைலட், `அதிகாரம் வந்தவுடன் வந்தவழியை திரும்பிப் பார்க்காதவரை அடிக்கடி பார்த்திருக்கிறேன்' என அசோக் கெலாட்டை மறைமுகமாகச் சாடியிருக்கிறார்.

ஜெய்ப்பூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய சச்சின் பைலட், ``ஒரு மரம் வலிமையாகவும் உயரமாகவும் இருக்கிறது. அதன் வேர்களும் வலுவாக இருக்கின்றன. அதே சமயம் பணமும், அதிகாரமும் வந்தபிறகு, வந்தவழியை திரும்பிப் பார்க்காத ஒருவரை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

சச்சின் பைலட்

கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கி தடைகளை உருவாக்க விரும்பும் பல சக்திகள் இருக்கின்றன. பல சவால்களும் இருக்கின்றன. இவை காலப்போக்கில் அதிகரித்தும் வருகின்றன. எனவே அவற்றைச் சமாளிப்பதற்கான உறுதிமொழியை எடுத்து சத்தியத்தின் பாதையில் நடக்கவேண்டும். இது கடினம்தான், நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும்" என்றார்



from India News https://ift.tt/tgJBO21

No comments