Breaking News

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை - நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?!

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை கடந்த ஜனவரி மாதம் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் தொடங்கிவைத்தார். அப்போது, “சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் அனைவருக்கும் பலன் கிடைக்கும். மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட இந்தக் கணக்கெடுப்பு உதவும். கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்ததும் அந்த தகவல்கள் மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு சாதியிலும் இருப்பவர்கள் எவ்வளவு பேர் என்ற விவரம் இதன் மூலம் திரட்டப்படும்“ என்றார் நிதிஷ் குமார்.

நிதிஷ் குமார்

முதல்வர் இந்த கணக்கெடுப்பை தொடங்கிவைத்ததை அடுத்து, அரசு அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் மக்களிடம் சேகரிக்கப்பட்டுவந்தன. இதற்காக, மாநில அரசு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்தப்பணியை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டுமென்பது பீகார் அரசின் திட்டம்.

இந்த நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்திவருவதற்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், ‘திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தகுதிகள் இருந்தும், இல்லாத ஒரு சாதிப் பிரிவை உருவாக்கி, அதில் அவர்களைச் சேர்த்திருக்கிறார்கள். திருநங்கைகளைத் தனி சாதியாகப் பிரிக்க மாட்டோம் என்று அரசு விளக்கம் அளித்திருக்கிறது என்றாலும், அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதலில் அந்த வகைப்பாடு இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு பாகுபாட்டுடன் இருக்கிறது’ என்று வாதிட்டனர்.

பாட்னா உயர் நீதிமன்றம்

மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கூறி, அதற்கு மே 4-ம் தேதி இடைக்காலத் தடைவிதித்தது.

மேலும், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு சட்டப்படி அங்கீகாரம் இல்லை என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. மாநில அரசு கையிலெடுத்திருக்கும் இந்த விவகாரம், நாடாளுமன்ற உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கிறது. கணக்கெடுப்பின் விவரங்களைக் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அரசின் நோக்கம் கவலையளிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உரிமை இல்லை என்கிற பட்சத்தில், அதை மீறி வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக உத்தரவுகள் செல்லுபடியாகாது’ என்று பாட்னா உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு

“கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் விவரங்களை பாதுகாக்க அரசு முறையான ஏற்பாடு எதையும் செய்யவில்லை. இந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கான தேவை குறித்து அரசு தெரிவிக்கவில்லை. எந்தவொரு விளக்கத்தின் மூலமாகவும் இந்த கணக்கெடுப்பை நியாயப்படுத்த முடியாது” என்றும் அந்த உத்தரவில் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வைத்து எதிர்க் கட்சியான பா.ஜ.க அரசியல் செய்கிறது. ‘நிதிஷ் குமார் அரசு தனது முடிவை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த முடியவில்லை. இது, அரசின் மிகப்பெரிய தோல்வி. நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று பா.ஜ.க தலைவர் சாம்ராட் சௌத்ரி கூறினார்.

தேஜஸ்வி யாதவ்

ஆனால், இது ஒரு இடைக்காலத் தீர்ப்புதான் என்றும், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்துவருவதாகவும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.



from India News https://ift.tt/O7uCysa

No comments