Breaking News

``உங்களை போல், நான் அதிகாரத்துக்காக அலையவில்லை” - ஓ.பி.எஸ் வைத்திலிங்கத்தை சாடிய எடப்பாடி

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாட்டில், அ.ம.மு.க உள்ளிட்ட மாற்றுகட்சியை சேர்ந்த பலர் அ.தி.மு.க-வில் இணையும் விழா பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வைத்திலிங்கத்தின் சொந்த ஏரியாவில் நடைபெற்றதால் இக்கூட்டம் பலராலும் கவனிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

நிர்வாகிகள் பலரும் போட்டி போட்டு கொண்டு எடப்பாடியை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். வழி நெடுக வரவேற்பு கொடுத்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்க மேடையை சுற்றி பவுன்சர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். எடப்பாடிக்கு ராட்சஸ மாலை அணிவித்த நிர்வாகிகள் வீரவாள், செங்கோல் உள்ளிட்டவற்றை நினைவு பரிசாக கொடுத்து மாஸ் காட்டினர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``அ.தி.மு.கவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மா.சேகர் துரதிஷ்டவசமாக அ.ம.முகவிற்கு சென்று விட்டு தற்போது நம்முடன் இணைந்திருக்கிறார். ஆர்.காமராஜ், மா.சேகர் இருவரும் வைத்திலிங்கம் குறித்து பேசினார்கள். ஒரு தொண்டன் கூட மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறான். ஆனால் தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பால் எம்.எல்.ஏ, அமைச்சர், எம்.பி ஆன வைத்திலிங்கத்துக்கு அந்த எண்ணம் இல்லை.

ஒரத்தநாடு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

இருபது ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொடிகட்டி பறந்த வைத்திலிங்கம் மாவட்ட மக்களுக்கு எதவாது செய்திருக்கிறாரா. யாருக்கும் எதையும் செய்ய கூடாது என நினைக்கும் நபர் வைத்திலிங்கம். இப்படிப்பட்டவரை நான் பார்த்தது கிடையாது. திருச்சியில் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் இருவரும் என்னை திட்டி பேசினார்கள். உங்களை போல் நான் அதிகாரத்திற்காக அலையவில்லை.

அதற்காக நான் எதையும் விட்டு கொடுக்க மாட்டேன். விவசாய குடும்பத்தில் பிறந்து உழைத்து படிப்படியாக வளந்தவன் நான். ஓராயிரம் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் வந்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது. துரோகிகளுக்கு அ.தி.மு.கவில் இடம் இல்லை. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என் சொன்னதற்காக நான் முதலமைச்சராக இருக்க கூடாது என எனக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ்ஸை கட்சியில் சேர்த்து கொண்டு ஒருங்கிணைப்பாளராக ஆக்கினேன்.

ஒரத்தநாடு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

துரோகம் இழைத்தவருக்கு உயர்ந்த பதவி, துணை முதல்வர், பெரிய இலாகா கொடுத்து மரியாதை தந்தோம். இதைவிட அவருக்கு வேறு என்ன வேண்டும். எத்தனை முறைதான் ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்துவார் என தெரியவில்லை. ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் நாடகம் பலிக்காது, வஞ்சகம் செல்லாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா யாரோடு சேரக் கூடாது என நினைத்தார்களோ, ஜெயலலிதாவின் மறைவிற்கு யார் காரணமோ அவர்களுடன் சேர்ந்து இருவரும், தி.மு.கவின் பி டீமாக செயல்படுகின்றனர்.

தி.மு.க-வின் தூணாக இருந்து கட்சியை இயக்க கூடியவரான சபரீசனை சந்தித்து பேசியிருக்கிறார். நான் முன்பு சொன்னது இப்போது நிஜமாகியிருக்கிறது. அவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்? டி.டி.வி.தினகரனை, ஜெயலலிதா பத்து ஆண்டு காலம் கட்சியிலிருந்து நீக்கி வைத்திருந்தார். அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. துரோகம் செய்து, சில மாயாஜாலங்கள் செய்து அ.ம.மு.கவை தொடங்கியவர் அ.தி.மு.கவினரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, அ.ம.மு.க.,வில் இணைத்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்ஸும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டனர். இன்றைக்கு இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர். கட்சியையும், ஆட்சியையும் பிடிப்பதாக சொல்கின்றனர். எந்த காலத்திலும் கட்சியை கைபற்ற முடியாது. அம்மா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்திய கொடுமையான மனிதர் தான் ஓ.பி.எஸ்.

டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் இருவரை பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம். இனி அ.தி.மு.க என்று சொன்னால் அது நாம்தான். நமக்கு எதிரி தி.மு.க. அவர்களை வீழ்த்துவது தான் நம் லட்சியம். ஓ.பி.எஸ் வைத்திலிங்கம் எங்கு வேண்டுமானாலும் கூட்டங்களை நடத்தட்டும். உங்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், சபரீசனும், உதயநிதியும் ரூ.30,000 கோடி வைத்துள்ளனர் என ஆடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

ஒரத்தநாடு பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

இரண்டு வருடத்தில் ரூ.30,000 கோடி மக்கள் பணத்தை சுரண்டியுள்ளனர். கொள்ளையடிப்பதை மட்டுமே தி.மு.க அரசு சாதனையாக செய்துள்ளது. இதனை நாங்கள் சும்மா விடமாட்டோம். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி வரும் போது இந்த பணம் மீட்கப்படும். ரூ.30 ஆயிரம் கோடி குறித்து அமித் ஷாவிடம் கூறினோம் அவரும் ஆதாரங்களை திரட்டிக்கொண்டிருப்பதாக சொன்னார். விரைவில் ஆளுநரை சந்தித்து, விசாரிக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளோம்.

ஆட்சியில் நடக்கின்ற தவறுகளை சுட்டி காட்டும் அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைப்பது என எல்லாவற்றையும் பொறுத்து கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆடியோ விவகாரத்தை விசாரணை செய்தாலே தி.மு.க அரசு ஆட்டம் கண்டு விடும். அமைச்சரவை மாற்றத்தால் ஊழல் நிரூபணமாகியிருக்கிறது.

ஒரத்தநாடு அ.தி.மு.க பொதுக்கூட்டம்

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்தே உள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0 என்றார்கள் ஆனால் ஓ போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம், சொத்து வரி, பால், கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டாவில் தி.மு.க ஆட்சி காலத்தில் தான் மீத்தேன், ஈத்தேன் எடுக்க அனுமதி வழங்கி, விவசாய நிலங்களை பாலைவனமாக்க முயன்றனர். ஆனால் அ.தி.மு.க அரசு விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து, மத்திய அரசிடம் போராடி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, விவசாயிகளை பாதுகாத்தது. தி.மு.க எப்போதும் விவசாயிகளுக்கு துரோம் செய்து வருகிறது. இதனை இப்பகுதி விவசாயிகள் உணர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது. நடந்தாய் வாழிக் காவிரி என்ற திட்டத்தில் அசுத்த நீரை வெளியேற்ற திட்டம் தீட்டி மத்திய அரசிடம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அனுப்பினோம். இது தொடர்பாக நாடாளுமன்ற, மக்களவைக் கூட்டுக்குழுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தொடர்பாக தி.மு.கவை சேர்ந்த 38 எம்பிக்களும் இதுவரை பேசவில்லை. அதிமுக கட்சி தற்போது புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்” என்றார்.



from India News https://ift.tt/40iIWtB

No comments