Breaking News

``செந்தில் பாலாஜி... ரெய்டில் 150 கிலோ தங்கம் பிடிபட்டதாக சொல்கிறார்கள்" - திருச்சியில் ஹெச்.ராஜா

திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள திருச்சி பா.ஜ.க., அலுவலகத்தில் பா.ஜ.க., அரசின் 9-வது ஆண்டு சாதனைகள் குறித்தான கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹெச்.ராஜா, ``தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த போது, செந்தில் பாலாஜியையோ, ஸ்டாலினையோ பதவியை விட்டு ராஜினாமா செய்யச் சொல்லாதவர்கள், எதிர்பாராதவிதமாக நடந்த ரயில் விபத்திற்காக பிரதமரை பதவி விலகச் சொல்வது ஏன்? இந்தியாவில் தொடர்ந்து 34 மாதங்களாக ரயில் விபத்தே நடைபெறவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது.

ஒடிசா ரயில் விபத்து

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடலை அனுப்பி நிவாரணம் கொடுத்து, 24 மணி நேரத்தில் விபத்துக்குள்ளான ரயில் பாதையை சரிசெய்துள்ளோம். மீண்டும் ரயில் சர்வீஸ் ஆரம்பித்துவிட்டது. ரயில்வே மினிஸ்டர் சம்பவ இடத்திலேயே இருக்கிறார். விபத்து நடந்த உடனேயே பிரதமர் சம்பவ இடத்திற்குச் சென்றார். ராணுவமும் அங்கு உடனே போனது. இதனையெல்லாம் விரும்பாதவர்கள் தான் இப்போது தேவையில்லாமல் புலம்ப ஆரம்பித்துள்ளனர்” என்றார்.

மேலும் தொடர்ந்தவர், ``ரயில் விபத்துக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என பிரதமரும் சொல்லியிருக்கிறார். தி.மு.க., சீனியர்கள் யாருமே செந்தில் பாலாஜியைப் பற்றி வாய் திறப்பதில்லை. மத்திய அரசினுடைய இயக்கத்தால் ரெய்டு நடத்தப்படவில்லை. உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லாமல் ரெய்டுக்கு செல்ல மாட்டார்கள். ஆதாரங்களின் அடிப்படையில் தான் ரெய்டு நடந்திருக்கிறது.

ஹெச்.ராஜா

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் 150 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அறிக்கை வந்தபிறகு தான் மற்ற முழு விஷயங்கள் எல்லாம் தெரியவரும். ஆடு – புலி – புல்லு கதை தான் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நடைபெறும். நிச்சயமாக எதிர் அணிகள் இந்தியாவில் ஒன்று சேர வாய்ப்பே இல்லை. மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர். எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு விசாரணை செய்த காவலர்கள், குற்றம் சாட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிவிட்டனர். இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்” என்றார்.



from India News https://ift.tt/yBhbqmK

No comments