``தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின்... ஸ்டாலின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி” - டி.டி.வி தினகரன் சாடல்
அ.ம.மு.கவில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த மா.சேகர் அதிலிருந்து விலகி அ.தி.மு.கவில் சேர்ந்தார். அதற்கான இணைப்பு விழா பொதுக்கூட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் எதிரே கடந்த மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் மற்றும் வைத்திலிங்கம் இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அதே இடத்தில் அ.ம.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதே இடத்தில், நேற்று தி.மு.க அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அ.ம.மு.கவினர் தினகரனுக்கு செங்கோல் மற்றும் வீரவாள் நினைவு பரிசாக வழங்கினர். கூட்டம் தொடங்கிய உடனே பெய்யத் தொடங்கிய மழை கூட்டம் முடியும் வரை பெய்தது. இதில் டி.டி.வி.தினகரன், ``அ.ம.மு.க., ஆட்சி அதிகாரத்திற்காக தொடங்கப்படவில்லை. ஆறு ஆண்டுகளாக சோதனைகளையும், தேர்தல் தோல்விகளையும் தாண்டி ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்னுடன் உள்ளனர்.
நீங்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழித்து விட முடியாது. யாரோ ஒரு சிலர், குழப்பத்தால் குழப்பி போய் எங்கோ விலை போயிருக்கலாம். ஒரு சில சுயநலவாதிகள் கையில் உள்ள ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்க வேண்டும் எடுப்பதற்காக என்னுடன், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கைகோர்த்துள்ளனர். இது இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு, தேவைக்காக ஏற்பட்ட நிகழ்வு அல்ல. நாம் பிரிந்திருந்தால் தி.மு.க என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியாது என்பதாலும், ஆட்சியில் இருந்துக்கொண்டு தமிழக மக்களை வாட்டி வதைப்பதை தட்டிக்கேட்பதற்கும், ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இணைந்துள்ளோம்.
எங்களின் இணைப்பு தமிழகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த தலைமை பதவி சுயநலக்காரரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதை மீட்டெடுக்க தான், நானும், ஓ.பி.எஸ்-சும் இணைந்து இருக்கிறோம். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழக மக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் வெளிப்பாடு வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக முழுவதும் எதிரொலிக்கும்.
கடந்து ஆண்டு நடந்த பொதுக்குழுவுடன் அ.தி.மு.க.,வுக்கு அவர்கள் சமாதிக்காட்டி விட்டார்கள் என்பதை உணர்ந்து, இன்றைக்கு அ.தி.மு.க தொண்டர்கள், அ.ம.மு.க., தொண்டர்களுடன் தமிழகம் முழுவதும் கைகோர்த்து வருகிறார்கள். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பு எது எல்லாம் தமிழகத்திற்கு வேண்டாம் என்ற போராட்டம் நடத்தினரோ, அதை எல்லாம் விட்டு விட்டு, தற்போது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார் என்பது தான் உண்மை.
விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தேன் தடவிய வார்த்தைகளில் பேசிய ஸ்டாலின் தற்போது திரவகத்தை ஊற்றி தமிழக மக்களை நோகடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்ககூடிய காலம் நெருங்கி விட்டது. ஜெயலிலதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்படும் போது, நிச்சயம் தி.மு.க என்னும் தீயச்சகதியை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற முடியும். ஒரு சில சுயநலாவதிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர நாம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
from India News https://ift.tt/9oQX23f
No comments