"திறனற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில், உலகப்புகழ் பெற்றவர் மோடி!" - சுப்பிரமணியன் சுவாமி சாடல்
ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்திலுள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள், ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்து நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த விபத்தில், இதுவரை 290 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தவறான சிக்னல் வழங்கப்பட்டதன் காரணமாக இந்த ரயில் விபத்து நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது.
விபத்தில் சிக்கி 800-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். விபத்துப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வுசெய்த பிரதமர் மோடி, இந்த விபத்துக்கான காரணம் குறித்து அனைத்துக் கோணத்திலும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், மூத்த பா.ஜ.க பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``வேகமாகச் சென்று விபத்துக்குள்ளான ரயில், அந்த தண்டவாளத்தில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இன்னும் சொல்வதானால், அந்த தண்டவாளம் மெதுவாக செல்லும் ரயில்களுக்கானது என இப்போது தகவல் தெரியவந்திருக்கிறது. ஆகவே, பிரதமர் சொன்னால்தான் பதவி விலகுவேன் என்றில்லாமல், ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
மேலும், பிரதமர் மோடி, ஒரு திறனற்ற அல்லது பொருத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் உலகப்புகழ் பெற்றவர் என்பது தற்போது மீண்டும் தெரிய வந்திருக்கிறது. அதற்கு அவர் சரியான விலை கொடுத்து வருகிறார். இதற்கு மற்றொரு உதாரணம்தான் மணிப்பூர் கலவரம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from India News https://ift.tt/nDoEeHi
No comments