Breaking News

கருத்து சுதந்திரம் பற்றிய முதல்வர் ஸ்டாலினின் கருத்து; என்ன சொல்கிறது எதிர்க்கட்சி? - ஒன் பை டூ

வைகைச்செல்வன், செய்தித் தொடர்புச் செயலாளர், அ.தி.மு.க

``கருத்துச் சுதந்திரத்துக்காக முதல்வர் குரல் கொடுத்திருப்பது வரவேற்க வேண்டியதுதான். ஆனால், முதல்வரின் கருத்துக்கும், தி.மு.க ஆட்சியில் நடக்கும் சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா... ஆட்சிக்கு வந்ததுமே முந்தைய காலகட்டத்தில் தி.மு.க-வை விமர்சித்தவர்களையெல்லாம் சிறைப்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களைக் கைதுசெய்ததும் இந்த அரசுதானே... இன்று நாம் தமிழர் கட்சியினருக்காகக் குரல் கொடுக்கும் முதல்வரின் ஆட்சியில்தானே அதே கட்சியைச் சேர்ந்தவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது... கன்னியாகுமரியில் நா.த.க-வினர் நடத்திய கூட்டத்தில் மேடை ஏறித் தாக்குதல் நடத்தியதும், திருவாரூரில் நா.த.க-வினர்மீது மதுபாட்டில்களை வீசி கலகம் செய்ததும் தி.மு.க-வினர்தானே... இதெல்லாம்தான் கருத்தை, கருத்தால் வெல்லும் லட்சணமா... கள்ள ஓட்டுப் போட வந்தவரைப் போலீஸில் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரையே கைதுசெய்தார்களே... தி.மு.க ஆட்சியின் அவலங்களை எடுத்துச்சொல்லி, ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி சென்ற அதேநாளில் மிரட்டல்விடும் தொனியில் முன்னாள் அமைச்சர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்களே... இதெல்லாம் திராவிட மாடலின் அறங்களில் ஒன்றா... இந்த இரண்டு ஆண்டுகளில் கருத்துச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, `கருத்துகளை, கருத்துகளால் வெல்வதே அறம்’ என முதல்வர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது!’’

வைகைச்செல்வன் - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

``முதலமைச்சரின் இந்தக் கருத்து, அடக்குமுறைக்கு எதிரான குரல். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என, அவதூறுகளால் தன்னை வஞ்சனை செய்பவர்களுக்காகவும் அவர் குரல் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அவதூறு செய்பவர்கள்மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோ, அதற்கு விளக்கம் கேட்பதோ வேறு... அதைவிடுத்து ட்விட்டர் கணக்கையே முடக்குவதென்பது ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயல். தி.மு.க ஆட்சியில் கைதான ஒருசிலரும் கண்ணியமற்ற வகையில், நாகரிகமற்ற முறையில் பொதுவெளியில் அவதூறு பரப்பியவர்களே. அவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டதும் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகளே. முதல்வரின் கருத்தை விமர்சிக்கும் அ.தி.மு.க-வினர் தற்போது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஏதாவது கருத்து சொல்லியிருக்கிறார்களா... கடந்த காலங்களில் பத்திரிகையாளர்கள்மீது 1,300 வழக்குகளைத் தொடுத்தவர்தானே ஜெயலலிதா... `வழக்கு தொடுப்பதற்காகவே ஓர் அரசாங்கமா’ என உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பும்விதத்தில் ஆட்சி செய்தவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது... அரசியல் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, கருத்துச் சுதந்திரத்துக்காக முதல்வர் குரல் கொடுத்திருப்பது, தி.மு.க தாராளமய ஜனநாயகத்தோடு நடந்துகொள்வதற்கான சாட்சி. `தி.மு.க ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை’ என்று சொல்பவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் குறித்த அறிவு முதிர்ச்சியில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்!’’



from India News https://ift.tt/RAqcmlU

No comments