Breaking News

மக்களவைத் தேர்தல்: பாஜகவின் வாக்கு வங்கிக்கு கைகொடுக்குமா பொது சிவில் சட்டம்?!

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மதமும் குடும்ப விஷயங்களில் தங்கள் சொந்த தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றி வருகின்றன. அவை அந்தந்த மத நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் இருக்கும் தனிப்பட்ட சட்டங்களின் படியே திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு உள்ளிட்ட குடும்ப விஷயங்களில் பின்பற்றி வருகின்றன.

நாடாளுமன்றம்

இதற்கிடையில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதாக கூறுகிறது. இது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான தனிநபர் சட்டத்தை வலியுறுத்துகிறது. இதற்கு இந்திய அரசியலமைப்பின் 44- வது பிரிவை காரணமாக காட்டப்படுகிறது. இது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தைப் பரிந்துரைக்கிறது.

இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதன் மூலமாக, "பாலின சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றில் பாரபட்சமான நடைமுறைகளை அகற்றி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் கிடைக்கும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், பல்வேறு மத சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை நிலைநாட்டும்" என பாஜகவினர் கூறுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் - பாஜக

மறுபுறம் இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள், "தனிப்பட்ட சட்டங்கள் மத சுதந்திரம் மற்றும் கலாசார அடையாளமாக இருக்கிறது. இது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மீறுவதாக இருக்கும். அவர்களின் தனித்துவ அடையாளத்தை மோசமாக பாதிக்கும். இது முழுக்க, முழுக்க பாஜக செய்யும் வாக்கு வங்கி அரசியல்" என்கிறார்கள்.

இதற்கிடையில் கடந்த மாதம் 22-வது சட்ட ஆணையம் ஒரு மாதத்திற்குள் பொது சிவில் சட்டம் பற்றி பொதுக்கருத்துக்களைக் கேட்டிருந்தது. அதற்கான அறிக்கையை இம்மாத மத்தியில் வெளியிடலாம். அதில் பொதுக் கருத்துக்களின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

மோடி - அமித்ஷா

இந்தநிலையில் சமீபத்தில் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, "நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும்" என தெரிவித்தார். இதனால் வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எனவே பாஜக அரசின் வாக்கு வங்கிக்கு இது கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது?

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "மத்திய அரசு இந்துத்துவா ஐடியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவருகிறது. திருமணம், தத்தெடுத்தல், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் கடைபிடிக்கும் விஷயங்களை, அனைத்து தரப்பினரும் கடைபிடிக்க செய்யப்பார்க்கிறார்கள். சிறுபான்மையினருக்கு தனித்தனியான சட்டங்கள் இருக்கிறது.

ப்ரியன்

எனவே சீக்கியர்கள், பழங்குடியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்க்கிறார்கள். இதையடுத்து பழங்குடியினருக்கு விலக்கு தருகிறோம் என்கிறார்கள். இதை காரணமாக கூறி மற்ற சமூகத்தினரும் விலக்கு கேட்பார்கள். பெரும்பான்மையினோர் பேசும் இந்தியை எப்படி திணிக்கிறார்களோ, அதேபோல் ஒரே கலாசாரம், ஒரே பண்பாடு போன்றவற்றை கொண்டுவர நினைக்கிறார்கள்.

இது இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் பாதிக்கும். எனவே திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல் போன்ற விஷயங்களில் புதிதாக அனைவருக்கும் பொதுவான சட்டங்களை கொண்டுவர போகிறீர்களா? அல்லது ஒட்டு வாங்குவதற்காக பெரும்பான்மையினோர் கடைபிடிக்கும் விஷயங்களை அனைவருக்கு கடைபிடிக்க கூறுகிறார்களா? என்பதை பொறுத்தே ஆதரவு, எதிர்ப்பு நிலையை பற்றி தீர்மானிக்க முடியும்" என்றார்.

காங்கிரஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி செல்லகுமார், "இதை வாக்கு அரசியலுக்காக செய்கிறார்கள். சாதனைகளைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கும் அளவுக்கு அவர்களிடம் எதுவும் இல்லை. வேதனை தான் அதிகமாக இருக்கிறது. மீண்டும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுவதற்காக கொண்டுவருகிறார்கள்.

பெரும்பான்மையான இந்துக்களிடம் கூட பொதுவான சட்டம் இல்லை. மேகாலயாவில் காசி என்ற சமுதாயம் இருக்கிறது. திருமணம் செய்து கொண்ட பிறகு பெண் வீட்டில் தான் ஆண் சென்று வாழ வேண்டும். பெண் வீட்டு சொத்து அவருக்கு தான். தற்போது அந்த கலாசாரத்தை மாற்ற சொல்ல முடியுமா?.

டாக்டர் செல்லகுமார் எம்.பி

எனவே ஒவ்வொருவரும் ஒரு பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்கள். அதை சிதறடித்தால் எப்படி சரியாக இருக்கும். தேர்தலை நோக்கமாக வைத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார்கள். எனவே தான் காங்கிரஸ் எதிர்க்கிறது. சட்டத்தை கொண்டுவர விடமாட்டோம்" என அதிரடித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக செயலாளர் அஸ்வத்தாமன், "அம்பேத்கார் வகுத்து கொடுத்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இதை எதிர்ப்பவர்கள் அனைவரும் அம்பேத்காரின் கருத்தை எதிர்க்கிறார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக நீதி, சமதர்மம், எல்லோருக்கும் ஒரே நீதி என்று வார்த்தை அளவில் தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

அஸ்வத்தாமன்

ஆனால் நடைமுறையில் ஒரே செயலை ஒரு மதத்தினர் செய்தால் தண்டனைக்குறிய குற்றம், வேறு மதத்தினர் செய்தால் குற்றம் இல்லை என்பது உலக அளவில் எந்த நாட்டிலும் இல்லை. மதத்திற்கு ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று எப்படி உலக அளவில் கூற முடியும். இதனை நாளாக அனைவரும் சமம் என்று கூறியவர்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் பொழுது அவர்களின் இரட்டை வேடம் மக்களுக்கு தெரியும். எதிர்க்கட்சிகள் தான் வாக்கு வங்கி அரசியலாக திருப்ப பார்க்கிறார்கள்" என்றார்.



from India News https://ift.tt/4EU8Xae

No comments