Breaking News

சந்திர பிரியங்கா: `வன்கொடுமை வழக்கு பதிய வேண்டும்’ - பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரத்தில் நாராயணசாமி

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால் 90 சதவிகித மானியம் கிடைக்கும் என கருதினோம். அதன்பின் நிலைப்பாடை மாற்றிக்கொண்டு மாநில அந்தஸ்து கேட்டோம். யூனியன் பிரதேசத்துக்கு கடன் வாங்கும் அதிகாரம் இல்லை. அதனால் ரங்கசாமி புதுவைக்கு தனி கணக்கை தொடங்கினார். அதனால் 70 சதவிகிதமாக இருந்த மத்திய அரசின் மானியம், 30 சதவிகிதமாக குறைந்தது. அதன் பின்னர்தான் மாநில அந்தஸ்து கோரிக்கையை ரங்கசாமி ஆரம்பித்தார். ஆனாலும் அவர் மாநில அந்தஸ்தில் உறுதியாக இல்லை. 2011 முதல் 2016 வரை ஆட்சியில் இருந்தார். இரண்டு ஆண்டுகள் மோடி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். அப்போது ஏன் அவர் மாநில அந்தஸ்து பெறவில்லை?

முதலமைச்சர் ரங்கசாமியுடன் சந்திர பிரியங்கா

2016-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மாநில அந்தஸ்து தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லிக்கு சென்ற போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி வரவில்லை. அவருக்கு அழைப்பு விடுத்தும், வரவில்லை. பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில அந்தஸ்தை கேட்டோம். ஆனால் அந்த கோப்பை கிடப்பில் போட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக மாநில அந்தஸ்தை தராமல் தடுத்து நிறுத்தினர். ரங்கசாமி முதலமைச்சராகி இரண்டரை  ஆண்டுகளாகிறது. மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என்று கூறினார் ரங்கசாமி. தேர்தல் பிரசாரத்தின்போது புதுவைக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார். இதில் யார் குற்றவாளி ?

மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் இல்லை, வழங்கும் எண்ணம் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இல்லை. ரங்கசாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.

ஒரு பெண் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு கவர்னரை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, `அமைச்சர் சந்திரபிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என்றும் கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கடிதமும் ஏற்கப்பட்டு, புதுவை அரசுக்கு வந்துள்ளது. பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தி உள்ளனர்.

நாராயணசாமி

அமைச்சர்கள், முதலமைச்சரின் செயல்பாடுகள் சரியாக உள்ளதா? ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இப்படி அறிக்கை கொடுத்திருப்பார்? மன வேதனையோடு அந்த கடிதத்தை எழுதியுள்ளார். ஆண் அதிகார வர்க்கம் என்னை செயல்படவிடாமல் தடுத்துள்ளது என்றும், தனிப்பட்ட பிரச்னையை முன்வைத்து பழிவாங்குகின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தனக்கு சாதி, பாலின ரீதியில் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் சுயரூபத்தை அமைச்சரின் கடிதம் காட்டுகிறது. இது மிகப்பெரும் குற்றச்சாட்டு. இது குறித்து தலித் வன்கொடுமை சட்டத்தில் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது” என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/YIL58zq

No comments