Breaking News

`அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள்!' - யாருடைய அலட்சியம் காரணம்?!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பட்டாசு ஆலை வெடிவிபத்து மிகக் கொடூரமாக நிகழ்ந்திருக்கிறது. கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் - கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்திருந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த சோகம் தணிவதற்குள், தற்போது அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் உள்ள நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து நடந்து இதுவரையில் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பட்டாசு ஆலை விபத்து

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்ளின் குடும்பத்துக்கு மூன்று லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், தொடர்ந்து நடந்துவரும் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு யார் பொறுப்பு? யாருடைய அலட்சியம் காரணம்? தடுப்பு நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை? என அடுத்தடுத்து கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

எதிர்க்கட்சித்தலைவர், எடப்பாடி பழனிசாமி:

தொடர்ந்து நடக்கும் பட்டாசு விபத்துகள் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு, தீயணைப்புத் துறையினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஓசூர் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதி உதவியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம்:

அதேபோல, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ``தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், கழிவுப் பட்டாசுகளை அகற்றுவது குறித்தும், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. பட்டாசு தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு இயக்கம் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை அரசு கவனிக்காத காரணத்தால் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை ஆகிவிட்டன!" எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஒ பன்னீர் செல்வம்

தே.மு.தி.க தலைவர், விஜயகாந்த்:

அதேபோல தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தீபாவளிக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில், அரசின் கவனக்குறைவால் இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இதுபோன்ற உயிரிழப்புகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக குழு ஒன்றை அமைத்து, பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோன்களில் ஆய்வு செய்து உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டும் போதாது, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!" என கூறியிருக்கிறார்.

பா.ம.க நிறுவனர், ராமதாஸ்:

``தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இதுவாகும். பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!" என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

அதேபோல பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``நாட்டு வெடி ஆலைகள் மற்றும் பட்டாசு ஆலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிகளை கடுமையாக்க வேண்டும்; ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு செயல்வடிவம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் இத்தகைய விபத்துகள் தொடர்கதையாகின்றன. இனிவரும் காலங்களிலாவது பாதுகாப்பு விதிகளை கடுமையாக்கி இத்தகைய விபத்துகளைத் தடுக்க வேண்டும்!" என்றிருக்கிறார்.

இரா.முத்தரசன்

சி.பி.ஐ மாநில செயலாளர், முத்தரசன்:

"தமிழ்நாட்டில் அத்திப்பள்ளி பட்டாசுக் கடை விபத்து போன்ற கோர விபத்துகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணா்த்தும் படிப்பினையில், அடுத்து தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், எதிா் காலத்தில் விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேவையான திருத்தங்களைச் செய்து, வரைமுறைகளை உருவாக்கி, கடுமையாக அமல்படுத்த வேண்டும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.

சீமான்

நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்:

``தில்லையாடி வெடிவிபத்துக்குப் பிறகாவது தி.மு.க அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள பட்டாசு மற்றும் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலைகளில் முறையான சோதனைகள் செய்திருந்தால், அரியலூரில் வெடி விபத்து நிகழாமலே தடுத்திருக்க முடியும். திமுக அரசின் அலட்சியப்போக்கே தற்போது அரியலூர் வெடிவிபத்தில் பலர் பலியாக முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் அவ்வப்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிவிபத்துக்கள் நிகழ்வதும், அவை ஒரு நிமிட செய்தியாவதும், தமிழ்நாடு அரசும் தனது கடமைக்கு சொற்பத் தொகையை இழப்பீடாக வழங்கிவிட்டு கடந்து செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. அதனை நிரந்தரமாக தடுக்க இன்று வரை தமிழ்நாடு அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டாசு உரிமையாளர்கள் உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும், அடிப்படை விதிகளையும் காற்றில் பறக்கவிடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும், பட்டாசு விபத்துகளின் வீரியம் தெரிந்தும் அதனை கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்வதற்கு அடிப்படை காரணங்கள்!" என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியிருக்கிறார்.

`இதில் தேவை, விபத்துக்குப் பிறகான நிவாரணம் அல்ல... விபத்து நடக்காமல் இருக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே!’ என்பதை அரசு நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/n3K9Yq2

No comments