ஒன் பை டூ: `துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சொல்ல வேண்டாம்' என்ற முதல்வரின் விமர்சனம்?
பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க
‘‘துணிச்சல் குறித்துப் பேச அ.தி.மு.க-வுக்கு என்ன அருகதை இருக்கிறது... இதே எடப்பாடி பழனிசாமி, தான் முதல்வராக இருந்தபோது ‘சி.ஏ.ஏ சட்டத்தால் எந்தச் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். ஆனால், இப்போது ‘கூட்டணி தர்மத்துக்கு உட்பட்டு ஆதரித்தோம்’ என்கிறார். விவசாயிகளின் உயிரை உறிஞ்சும் வேளாண் மசோதாவுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு, ‘அமித் ஷாவுக்காக மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்’ என்று நாடாளுமன்றத்திலேயே சொன்ன அடிமைக் கூட்டம்தானே அ.தி.மு.க... ‘பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையவே கிடையாது’ என்று ஜெயலலிதா சொன்னதையும் மீறி பா.ஜ.க-வுடன் இத்தனை காலம் உறவாடி, அவர்களது அலுவலக வாசலிலேயே கிடையாய்க் கிடந்தார்கள். கூட்டணியைவிட்டு வெளியேறிய பிறகும்கூட இனியாவது ஒன்றிய பா.ஜ.க அரசின் கொடும் செயல்களை எதிர்த்து பேசும் துணிவும் திராணியும் எடப்பாடிக்கு இருக்கிறதா... ஆக, அவர்களது இந்த துணிச்சலைத் தெரிந்துதான் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வையே தூக்கி எறிந்தார்கள். அடுத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களைத் துடைத்து எறியப்போவதைப் பார்க்கத்தான் போகிறோம்.’’
பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
``எடப்பாடியாரின் துணிச்சல் குறித்துப் பேச ஸ்டாலினுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தி.மு.க-வுக்குமே கடுகளவு அருகதைகூட கிடையாது.
அ.தி.மு.க துணிச்சலால் பிறந்த இயக்கம். மத்திய பா.ஜ.க அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நினைத்தபோது அதை எதிர்த்துப் பேசியதுடன், டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றி நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. ஆனால், சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து தி.மு.க கொண்டுவந்த தனித் தீர்மானத்தில், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தைகூட கண்டிக்கவில்லை. கூட்டணியிலுள்ள கட்சியை எதிர்க்கத் துணிவில்லாமல் வெறும் கண்துடைப்புக்காகத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது தி.மு.க. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக 22 நாள்கள் நாடாளுமன்றத்தையே முடக்கிய வரலாறு அ.தி.மு.க-வுக்கு உண்டு. கடந்தகாலத்தில், சுயநலத்துக்காக மத்திய பா.ஜ.க அரசில் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சி தி.மு.க. ஆனால், மக்கள் நலனுக்காக பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி, ஆட்சியையே கலைத்த கட்சி அ.தி.மு.க. எனவே, துணிச்சல் பற்றி எங்களுக்கு வகுப்பெடுக்க தி.மு.க-வுக்கு எந்தத் தகுதியும் கிடையாது!
from India News https://ift.tt/PR8ecqG
No comments