``யார் மிகப்பெரிய நாடக நடிகர்... சசிகலாவை கேட்டால் தெரியும்!" - அமைச்சர் உதயநிதி
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். சாத்தூரில், மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு முகாமில் மனுசீராய்வு பணிகளை ஆய்வு செய்த அவர், விருதுநகரில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி, "விருதுநகர் மாவட்டம் எழுத்தாளர்கள், ஆட்சியாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் என வரலாற்று சிறப்பு மிக்கது. உழைப்பால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம் இளைஞரணியை உதாரணமாக கூறலாம். முதல்வர் ஸ்டாலின், 1967-ல் ஆரம்பித்து இன்று வரை பலத்தரப்பட்ட அரசியல் கள பணிகளை செய்துள்ளார்.
படிப்படியாக முன்னேறி இன்று முதல்வராக உள்ளார். இன்று இந்த கூட்டத்தில் 9 பேருக்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 658 பேரில் 452 பேருக்கு இளைஞரணியில் பொறுப்பு உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞரணி உறுப்பினர்களுக்கு 'நீட் விலக்கு, நம் இலக்கு' என்ற பிரசுரம் வழங்கப்பட்டு, அதில் இணைய 'லிங்க்' வழங்கப்பட்டுள்ளது. 50 நாளில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற வேண்டும். இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இது தனிப்பட்ட உதயநிதி பிரச்னை இல்லை, தி.மு.க., பிரச்னை இல்லை. இது தமிழகத்தின் பிரச்னை.
மதுரையில் ஒரு கட்சியின் மாநாடு நடந்தது. அந்த மாநாடு எதற்காக நடந்தது, அதில் அந்த இயக்கத்தின் வரலாறு, கொள்கை எதாவது பேசப்பட்டதா, இல்லை. ஆனால் தி.மு.க., இளைஞரணியின் சேலம் மாநாடு இந்தியாவே பேசும் வகையில் எடுத்துக்காட்டாக அமையும். நீட் தேர்வால் 6 ஆண்டுகளில் மட்டும் 22 குழந்தைகளை இழந்துள்ளோம். அரியலுார் அனிதாவில் தொடங்கி, சென்னை குரோம்பேட்டை ஜெகதீசன் வரை நீட் தேர்வில் தகுதி பெற முடியாததால் தற்கொலை செய்துள்ளனர். தி.மு.க., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியையும் நீட் தேர்வு போராட்டத்திற்கு அழைத்தோம்.
நீட் தேர்வில் அரசியல் புகுத்த வேண்டாம், இது மக்கள், மாணவர்களுக்கான போராட்டம். நீட் தேர்வு ரத்தானால் மொத்த பலனையும் நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று அன்றைய உண்ணாவிரத கூட்டத்தில் கூறினேன். இன்றும் அதையேத்தான் கூறுகிறேன். நீட் தேர்வு ரத்துக்காக பெறப்பட்ட கையெழுத்துக்களை இளைஞரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைப்போம். தமிழக முதல்வர், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். பிரதமர் மோடி, எங்கு போனாலும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் என்னை பற்றி தான் பேசுகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் வளர்ந்த ஒரே குடும்பம் கருணாநிதியின் குடும்பம்தான் என்று மத்திய பிரதேசத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இந்த ஒட்டுமொத்த தமிழகமுமே கருணாநிதியின் குடும்பம் தான். பா.ஜ.க., ஆட்சிக்கு வந்து ஒன்பதரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்.
நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார்கள், 15 பைசாவாவது போட்டீர்களா?. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், இரண்டாவது தவணை பணமே அனைவருக்கும் ஏறிவிட்டது. ஆனால் இவர்கள் இன்னமும் 15 லட்சத்தை கொண்டுவரவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் வளர்ந்த ஒரே நபர் அதானி தான். சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறிய 7.5 லட்சம் கோடி எங்கே போனது தெரியவில்லை என கூறி உள்ளனர்.
இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் ஒரு நாடகம், நான் கையெழுத்திட மாட்டேன் என்கிறார். யார் மிகப்பெரிய நாடக நடிகர் என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை கேட்டால் தெரியும். அவரது காலை பிடித்து முதல்வராகி, பின் அந்தம்மாவின் கால்களையே வாரிவிட்டவர் பழனிசாமி. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அடிமைகளை விரட்டியது போல் 2024-ம் ஆண்டு தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றார்.
இதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித்தேர்வு படிப்பகத்தை திறந்துவைத்ததுடன், அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்ட முடிவில், 'திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகள் தொடர்பாக முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக' அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அங்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக, சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உரிமை தொகைக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 88 ஆயிரம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு பணம் வரவு வைக்கப்படுகிறது. மாநில அளவில் 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன. ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் கள ஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்ட 7.71 லட்சம் மனுக்களின் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலுவை மனுக்கள் ஆய்வு செய்த பிறகு முதல்வரின் ஆலோசனை பெற்று புதிதாக விண்ணப்பிப்போரின் வசதி ஏற்படுத்தப்படும். ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக காவல்துறை அறிக்கை கொடுத்துள்ளது. எந்தவகையான வன்முறையாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்" என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from India News https://ift.tt/Hytc9M4
No comments