Breaking News

``அதிமுக-பாஜக கூட்டணி முறியும் என எதிர்பார்க்கவில்லை” - ஜி.கே.வாசன் அப்செட்

``நன்றி மீண்டும் வராதீர்கள்” எனச் சொல்லி பா.ஜ.க-வை கூட்டணியைவிட்டு வெளியேற்றியிருக்கிறது அ.தி.மு.க... இப்படியெல்லாம் நடக்குமென எதிர்ப்பார்தீர்களா?

``பொதுவாகவே இந்திய அரசியலில் கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், ஒருகட்டத்தில் கூட்டணியே முறிந்துபோவதும், பின்னர் மீண்டும் ஆரம்பிப்பதும் சகஜமான ஒன்றுதான். அதேசமயம் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் அங்கம்வகித்து வந்த நிலையில், இந்தக் கூட்டணி முறியும் என எதிர்பார்க்கவில்லை”

ஜி.கே. வாசன்

``சரி, இப்போது த.மா.க பா.ஜ.க பக்கமா... அ.தி.மு.க பக்கமா?"

``தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. எங்கள் தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, நல்ல முடிவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எடுக்கும்.”

``தேசிய ஜனநாயகக் கூட்டணியில் த.மா.க தொடர்கிறதா... வெளியேறிவிட்டதா?”

``எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் பெரிய கட்சி அ.தி.மு.க, மத்தியில் பெரிய கட்சி பா.ஜ.க. இரு கட்சிகளின் செயல்பாடுகளுக்கும் த.மா.க துணை நிற்கும். இரு கட்சிகளின் நலம் விரும்பியாக நாங்கள் இருக்கிறோம்."

அண்ணாமலை

`` `அண்ணாமலை அவதூறு கருத்துகளைப் பரப்புகிறார்' என்ற அ.தி.மு.க-வின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளின்மீதும் நன்மதிப்பு கொண்டிருக்கிறது த.மா.க. இந்த நிலையில், இரு கட்சிகளின் பிரதிநிதிகள் குறித்து விமர்சிப்பது சரியாக இருக்காது. இரு கட்சிகளுக்கு இடையே கருத்து முரண் இருந்துவந்தது. அது முறிவில் போய் முடிந்திருக்கிறது, அவ்வளவுதான்."

ஜி.கே.வாசன்

``I.N.D.I.A கூட்டணி வலிமைபெற்று வருவதை எப்படிப் பார்க்குறீர்கள்?”

``ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சி.பி.எம் I.N.D.I.A கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகமாகிவிட்டது. அந்தக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் மாநிலத்தில் ஒரு நிலைப்பாடும் மத்தியில் ஒரு நிலைப்பாடும் கொண்டிருக்கின்றன. 100% முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு கூட்டணியை வலிமையான கூட்டணி என மக்கள் ஏற்கமாட்டார்கள்.”

ஜி.கே.வாசன்

``பெண்களின் வாக்குகளைக் கவர்ந்திட பெயருக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுகிறதே!”

``அரசியலமைப்பின்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை என இரண்டையும் செய்தால்தான், அமல்படுத்தமுடியும். இப்போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் இந்த மசோதவைக் கொண்டுவர முயன்றன. ஆனால், அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. நாடாளுமன்றத்துக்குள் இந்த மசோதாவுக்கு ஆதரவளித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு... அவர்கள் உள்ளேயே எதிர்த்திருக்கலாமே.”

``தொகுதி மறுவரையறை நடந்தால், தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறையும் என்கிறார்களே?”

``வடக்கில் அதிக தொகுதிகள், தெற்கில் குறைவான தொகுதிகள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. செயல்வடிவம் பெறும் நேரத்தில் அதற்கு நான் நிச்சயம் குரல்கொடுப்பேன்.”



from India News https://ift.tt/FhwKsNO

No comments