Breaking News

ஏற்காடு: `முதல்வர், அமைச்சர் என யார் பெயரும் இல்ல!’ - அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு எதிராக கொதித்த திமுக

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் அமைந்திருக்கும் செங்காடு, புளியங்கடை ஆகிய கிராமங்களில் நடுநிலைப்பள்ளி மற்றும், தொடக்கப்பள்ளி இயங்கிவருகின்றன. ஆனால் அங்கு முறையான கட்டட வசதிகள் இல்லாமல், பல ஆண்டுகளாகப் பள்ளிக்கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்துவந்தன. அவற்றில்தான் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் படித்துவந்தனர்.

இது குறித்து 05.08.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ’இடியும் நிலையில் கட்டடங்கள்.. இல்லம் தேடிவரும் ஆசிரியர்கள்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அன்றைய தினமே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று கட்டடங்களை ஆய்வுசெய்து, உடனடியாக அந்தக் கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான நிதியாக பள்ளி ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் என, மூன்று பள்ளிகளைப் புதிதாகக் கட்ட 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில், பள்ளிகளின் கட்டுமான வேலைகள் முடிந்து, கடந்த 19.10.2023 அன்று ஏற்காடு, செங்காடு பகுதியில் அமைந்திருக்கும் நடுநிலைப் பள்ளியையும், புளியங்கடைப் பகுதியில் அமைந்திருக்கும் தொடக்கப் பள்ளியையும் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்த சித்ரா திறந்துவைத்தார்.

இந்நிலையில் கட்டட திறப்புக்கு திமுக-வினர் யாருக்கும் அழைப்புக்கொடுக்கவில்லை என்றும், பள்ளிக்கட்டடம் கட்டுவதற்கு நிதி வழங்கிய தமிழக முதல்வர் பெயரையோ அல்லது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பெயரையும் போடாமல், அதிமுக எம்.எல்.ஏ சித்ரா கல்வெட்டு பதித்துள்ளார் என்று திமுகவினர் சர்ச்சையை கிளப்பி உள்ளார்கள்.

கல்வெட்டு

இதுகுறித்து ஏற்காடு திமுக ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரனிடம் பேசியபோது, “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செய்தது முற்றிலும் விதிகளுக்கு முரணானது. அந்த கல்வெட்டில் வெறும் அரின் பெயரை மட்டும் பெரிதாக போட்டுக்கொண்டு, துறை அமைச்சர் பெயர் போடாதது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக நான் ஏற்கனவே ஏற்காடு பி.டி.ஒ அன்புராஜிடம் `இது முழுவதும் திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டம். இதனை தமிழக முதல்வர், அமைச்சர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் தான் திறக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அப்படி அவர்கள் எதுவும் செய்யவில்லை.

இப்படியிருக்க பள்ளிக்கட்டடங்களை திறந்த அதிமுக எம்.எல்.ஏ சித்ரா எதனடிப்படையில் இதில் உரிமைக் கொண்டாடும் விதமாக தன்னுடைய பெயரை மட்டும் கல்வெட்டில் போட்டுக்கொண்டு ஆளுங்கட்சியினர் பெயரை தவிர்த்தார். இது அனைத்திற்கும் அவரின் சுயநலம் தான் காரணம். கட்டட திறப்புக்கு அதிமுக தரப்பினர் தான் அழைப்பு விடுக்கவில்லை, அதிகாரிகளாவது அழைப்பு விடுத்திருக்கலாம் அல்லவா. யாருக்காக அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர் என்பது குழப்பமாக உள்ளது” என்றார் காட்டமாக.

இதுகுறித்து திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கத்திடம் பேசியபோது, “எப்போதும் எந்த அரசு நிதி வழங்குகிறதோ அவர்களின் பெயர்களை கல்வெட்டில் போட வேண்டும் விதிமுறையாகும். அப்படி இருக்கும் விதத்தில் மேற்படி பள்ளிக்கட்டடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்ற நிதியில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கினார். ஆனால் பெயர் எதனால் போடவில்லை என்பது எனக்கே சந்தேகமாக உள்ளது. அதனால் நான் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்கிறேன்” என்றார்.

அதிமுக எம்எல்ஏ சித்ரா

கல்வெட்டு தொடர்பான விமர்சனங்கள் குறித்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ராவிடம் பேசியபோது, “இது எனது சட்டமன்ற நிதியில் கட்டப்பட்டது. இதில், ஏன் மற்றவர்கள் பெயர் நான் போட வேண்டும். அதுமட்டுமல்லாது அமைச்சர் வந்து பார்ப்பதற்கு முன்பே நான் கட்டடம் கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டேன். அவர் இடத்தை மட்டும் தான் வந்து பார்த்துவிட்டு சென்றார். திமுக-வினர் நாங்கள் நிகழ்ச்சிக்கு வாங்க என்று கூப்பிட்டால் வரவா போறாங்க. அவங்களும் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை கூப்பிடுவதில்லை. நானும் அவர்களை கூப்பிடுவதில்லை” என்றார்.

அமைச்சரின் முகநூல் பக்க பதிவு

மேலும் இதுகுறித்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜனிடம் பேசியபோது, “அமைச்சர் நேரில் வந்து பார்வை மட்டும் தான் செய்தார். ஆனால் நிதி ஒதுக்கியது ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் தான். அவர் சொந்த மேம்பாட்டு நிதியில் ஒதுக்கியுள்ளார்” என்றார்.

மேலும் இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசியபோது, “நீங்கள் சொன்ன தகவல் குறித்து அதிகாரிகள் மத்தியில் விசாரிக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/MR7um2W

No comments