Breaking News

Tamil News Live Today: 12,525 ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம்; காணொளிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார் முதல்வர்!

12,525 கிராம ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம்... காணொளிக் காட்சியில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

காந்தி ஜயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராமசபைக் கூட்டங்களை 6-ஆக உயர்த்தி, அரசாணை வெளியிட்டது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும்வகையில், கிராமசபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, ஊராட்சிகளில் இல்லம்தோறும் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் முத்தான திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக, திட்ட செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்த குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கிராமசபைக் கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் தொடங்கி வைத்து, கிராமசபை குறித்த கருத்துகளை தெரிவிக்கவிருக்கிறார். அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்வர்.

கிராமசபைக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் பொதுவான விவாதப் பொருளாக, ஊராட்சிகளின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரககுடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெறவிருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம், மக்களிடையே உரையாற்றவிருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காந்தி ஜயந்தி; மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் இன்று காந்தி ஜயந்தி கொண்டாடப்படுகிறது. தேசப்பிதாவான மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் அரசு நிர்வாகங்களும், பொதுமக்களும் அவரின் உருவப்படங்களுக்கும், சிலைகளுக்கும் மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தியின் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.



from India News https://ift.tt/950hj2D

No comments