Breaking News

நைட்ரஜன் சிலிண்டர்களை ஆக்ஸிஜன் சிலிண்டர்களாக மாற்றி இந்தியாவுக்கே விநியோகிக்கும் கேரளா!

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு என்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ஆனால், கேரள மாநிலத்தில் ஆக்ஸிஜனுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என கொச்சி பெஸோ (Petroleum And Explosives Safety Organisation) டெபுட்டி சீப் கண்ட்ரோலர் வேணுகோபால் தனியார் தொலைகாட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பெஸோ டெபுட்டி சீப் கண்ட்ரோலர் வேணுகோபால் கூறுகையில், ``கேரளத்துக்கு தினமும் 85 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அவசியம் உள்ளது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தாலும், அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொண்டுள்ளோம். எந்த லீக்கும் இல்லாமல் முறையாக பராமரிப்பு பணிகளை செய்ய அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெஸோ டெபுட்டி சீப் கண்ட்ரோலர் வேணுகோபால்

கேரள மாநிலத்துக்கு தினசரி தேவையான ஆக்ஸிஜனைவிட கூடுதல் அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 523.83 மெட்ரிக் டன் மெடிக்கல் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. கேரளத்தில் 11 ஏர் சப்பிரஷன் யூனிட்கள் (air suppression unit) உள்ளன. கர்நாடகா மாநிலத்துக்கு தினமும் 25 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகித்து வருகிறோம். தமிழ்நாட்டுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் செய்துவருகிறோம். பிற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வது தொடரும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஆக்ஸிஜன் ஃபில்லிங் பிளாண்டுகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த மீட்டிங்கின் பலன்தான் நமக்கு இப்போது கிடைத்துக்கொண்டிருக்கிறது. இப்போது அனைத்து ஃபில்லிங் பிளாண்டுகளும், ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்களும் தினசரி ரிப்போர்ட் அளித்துவருகின்றன. எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டது, எவ்வளவு விற்பனை ஆனது, ஸ்டாக் எவ்வளவு உள்ளது என பெஸோ-வுக்கு தினமும் ரிப்போர்ட் அளித்துவருகின்றன.

ஆக்ஸிஜன் சிலிண்டர்

கொரோனா பரவலை முன்கூட்டியே உணர்ந்து சிலிண்டர் சப்ளையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் தேவை அதிகரித்ததால் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களை மருத்துவ பயன்பாட்டுக்கான சிலிண்டர்களாக மாற்றியுள்ளோம். அதுமட்டுமல்லாது, நைட்ரஜன் சிலிண்டர்களையும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களாக மாற்றியுள்ளோம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வரை கேரளத்தின் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன" என்றார். பிற மாநிலங்கள் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய திணறும்போது, கேரளம் சிறப்பான முறையில் ஆக்ஸிஜன் விநியோகித்து உதவுவது பாராட்டப்பட்டு வருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3njj24A

No comments