Breaking News

டிராவிட் முதல் விராட் கோலி வரை... நியூசிலாந்து அணிக்கு எதிராக ரன் குவித்த இந்திய வீரர்கள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த முதல் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

ராகுல் டிராவிட்

இந்தப் பட்டியலில் முதலிடம் இருப்பவர் "இந்தியா கிரிக்கெட் அணியின் சுவர்" என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட். இவர் நியூசிலாந்துக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1659 ரன்களை குவித்துள்ளார். அதில் மொத்தம் 6 சதங்களும் 6 அரை சதமும் அடங்கும். நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் அவரின் பேட்டிங் ஆவரேஜ் 63.40. 1997 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு முதல் முறையாக சுற்றுப் பயணம் செய்து விளையாடிய டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசியவர் ராகுல் டிராவிட். அதேபோல 2003 ஆம் ஆண்டு அகமதாபாதில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமும் விளாசியுள்ளார். கடைசியாக அவர் 2010 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலும் சதமடித்து எப்போதும் அந்த அணிக்கு பயம்காட்டியுள்ளார் ராகுல் டிராவிட்.

image

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் நியூசிலாந்துடன் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1595 ரன்களை சேர்த்துள்ளார். அதில் மொத்தம் 4 சதங்களும் 8 அரை சதங்களும் அடங்கும். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான காலக்கட்டத்திலேயே நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்து விளையாடியவர். அப்போது நேபியரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 88 ரன்களை சேர்த்து 12 ரன்களில் தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை தவறவிட்டார் சச்சின். மேலும் அந்த அணியுடன் நடைபெற்ற முதல் 7 போட்டிகளில் சச்சினால் சதம் அடிக்க முடியவில்லை. பின்பு 1997 இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் நியூசிலாந்துக்கு எதிரான முதல் சதத்தை பதிவு செய்தார் அவர். முதல் முதலாக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும் அடித்ததும் நியூசிலாந்துக்கு எதிராக 2002 இல் அகமதாபாதில் நடைபெற்ற டெஸ்ட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

image

விரேந்திர சேவாக்

விரேந்திர சேவாக் 12 டெஸ்ட் போட்டிகள் 812 ரன்கள் 2 சதங்கள் 3 அரைசதங்கள் என நியூசிலாந்துக்கு கிலி காட்டியுள்ளார். 2002 இல் நியூசிலாந்து தொடரில் மொத்தம் 40 ரன்கள் மட்டுமே சேர்த்தார் சேவாக். ஆனால் அதன்பின்பு 10 மாதம் கழித்து மொகாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். 2009 டெஸ்ட் தொடரில் சேவாக் அந்த அணிக்கு எதிராக ஒரு அரைசதமும் அடிக்கவில்லை, ஆனால் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா. பின்பு 2010 இல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முறையே 173, 96, 54, 74 ரன்களை சேர்த்து பிரமாதப்படுத்தினார் சேவாக். நியூசிலாந்துக்கு எதிராக குறைவான போட்டிகளில் விளையாடினாலும் நிறைவாக செய்திருக்கிறார் சேவாக்.

image

விவிஎஸ் லக்ஷ்மன்

வெளிநாட்டு அணிகளுக்கு எப்போதுமே லக்ஷ்மன் சிம்ம சொப்பனம்தான். நியூசிலாந்துக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 812 ரன்களும், 2 சதமும், 6 அரை சதமும் எடுத்துள்ளார். அதுவும் நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்தார் அவர். அதேபோல 2009 ஆம் ஆண்டு நேபியரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில்124, 2 ஆவது இன்னிங்சில் 76 ரன்கள் எடுத்து இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அதேபோல 2010 தொடரில் சிறப்பாக விளையாடினாலும் லக்ஷ்மனாலும் சதமடிக்க முடியவில்லை. 2012 நியூசிலாந்து தொடரில் லக்ஷமன் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவர் திடீரென தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

image

முகமது அசாருதின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதின் 12 போட்டிகளில் 796 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் மொத்தம் 2 சதம், 3 அரை சதம். 1988 இல் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அசார் பெரியளவில் சோபிக்கவில்லை. அவர் மொத்தம் 153 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் 1990 இல் நடந்த டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 192 ரன்கள் விளாசினார். அதன் பின்பு 1998 இல் மீண்டும் அந்நாட்டுக்கு எதிராக சதமடித்தார் அசார்.

image

இப்போதுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் யாரும் இந்த அளவுக்கு நியூசிலாந்து அணிக்கு எதிராக ரன் சேர்க்கவில்லை. இதில் விராட் கோலி 9 போட்டிகளில் 773 ரன்கள் எடுத்துள்ளார், அதில் 3 சதம் 3 அரை சதம் அடங்கும். அடுத்தபடியாக புஜாரா 9 போட்டிகளில் விளையாடி 749 ரன்கள், அதில் 2 சதம் 4 அரை சதம். இதற்கடுத்து ரஹானே 7 போட்டிகளில் விளையாடி 600 ரன்கள் அதில் 2 சதம், ஒரு அரைசதம் அடங்கும்.

- ஆர்.ஜி.ஜெகதீஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z2ihT4
via

No comments