Breaking News

இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா தொடர்ந்த இடைக்கால மனு தள்ளுபடி

இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த இடைக்கால மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன்-2 படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்குவதற்கு தடைகோரி, லைகா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.
 
லைகா தரப்பில், படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
 
image
இயக்குனர் ஷங்கர் தரப்பில், படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும், இதற்கிடையில் நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கபட்டது. மேலும், படப்பிடிப்பை மீண்டும் துவங்கினால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வழக்கில் மத்தியஸ்தராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், லைகாவின் இரு இடைக்கால மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2UiDxUH

No comments