Breaking News

லக்கிம்பூர்: சாட்டையைச் சொடுக்கிய உச்ச நீதிமன்றம்; மத்திய அமைச்சர் மகன் கைது! - பரபர சம்பவங்கள்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசத்திலும் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில், போராடும் விவசாயிகளின் பிரநிதிகளிடம் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்துவரும் நிலையில், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. அங்கு லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்திவருகிறார்கள்.

லக்கிம்பூர்

இந்த நிலையில், மத்திய உள்துறை இணையமைச்சரான அஜய் மிஸ்ராவுக்கு லக்கிம்பூர்தான் சொந்த மாவட்டம். அவர், அக்டோபர் 3-ம் தேதி தனது சொந்த ஊரிலிருந்து சற்று தொலைவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவை அழைத்திருந்தார் அஜய் மிஸ்ரா. இவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. அதைத் தொடர்ந்து அங்கு வன்முறை நிகழ்ந்தது. கார் மோதல் மற்றும் வன்முறை ஆகிய சம்பவங்களில் எட்டு விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். பஞ்சாப் முதல்வர் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பாகல் ஆகியோர் விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்டனர். அது பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது

விவசாயிகள் மீது மோதிய அந்த காரை மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டிவந்தார் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மத்திய அமைச்சரின் மகன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார் என்பதும் விவசாயிகளின் குற்றச்சாட்டு. ஆனால், விவசாயிகள் மீது மோதிய காரை தன் மகன் ஓட்டவில்லை என்று கூறிய மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, சம்பவம் நடந்தபோது அந்த இடத்திலேயே தன் மகன் இல்லை என்று மறுத்துவந்தார்.

இன்னொருபுறம், அஜய் மிஸ்ராவும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவும் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும், அஜய் மிஸ்ராவும் ஆஷிஷ் மிஸ்ராவும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. அதனால், ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆனால், அவர் கைதுசெய்யப்படவில்லை.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், லக்கிம்பூர் கொலைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தாமாக முன்வந்து வழக்குப்பதிவுசெய்தது. 7-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, லக்கிம்பூரில் நடைபெற்ற கொலைகள் குறித்து விரிவான அறிக்கையை 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மறுநாள் நடைபெற்ற விசாரணையின்போது, ‘விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாகக் கையாள்வீர்களா?‘ ‘கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால், இந்நேரம் அவரைக் கைது செய்திருக்கமாட்டீர்களா?’ என்று உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு ஆஜராவதற்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 9-ம் தேதி காலை 11 மணி வரை அவகாசம் தந்திருப்பதாக உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ‘விவசாயிகள் கொலையில் முக்கியக் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபரை இன்னும் கைது செய்யாமல், இன்று ஆஜராகுங்கள் நாளை ஆஜராகுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சாதாரண நபரை இப்படி கையாள்வீர்களா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் உ.பி அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

Also Read: ``விவசாயிகள் படுகொலை பற்றி குஷ்பூ, வருண் காந்தியிடமே விளக்கம் கேளுங்கள்!'' -கடுகடுக்கும் ஹெச்.ராஜா

உ.பி அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ‘நாளை (அக்டோபர் 9-ம் தேதி) காலை 11 மணிக்குள் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’ என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, ‘மற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களையும் இப்படி நீங்கள் நடத்துவீர்களா?’ என்று கேட்டார்.

கொல்லப்பட்ட விவசாயிகளின் உறவினர்கள்

விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் உத்தவைப் பிறப்பித்தனர். அதில், ‘இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே முன்வைத்த அரசுத் தரப்பு விளக்கங்கள், வாதங்கள் எதிலும் நாங்கள் திருப்தியடையவில்லை. அரசு மேற்கொண்டிருப்பதாக சொல்லப்படும் நடவடிக்கைகள் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. இங்கு சொல்லப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மறுநாளே நிறைவேற்றப்படுவதை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். வேறு விசாரணை முகமைகள் மூலமாக விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனங்களையும் சரமாரியான கேள்விகளையும் தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ராவை உ.பி போலீஸார் அக்டோபர் 10-ம் தேதி இரவு கைது செய்தனர். அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தியதாவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், எதற்கும் பிடிகொடுக்காமல் மழுப்பலாகப் பதில்களைச் சொன்னார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ரா கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அஜய் மிஸ்ராவும் கைதுசெய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் குரல் எழுப்பிவருகிறார்கள். இதிலும், உச்ச நீதிமன்றம் தலையிடுமா?

Also Read: லக்கிம்பூர் விவசாயிகளின் கொலைக்கு நீடிக்கும் அமைதி; இதுதான் உங்கள் பதிலா மோடி?



from தேசிய செய்திகள் https://ift.tt/3v1ZOVi

No comments