" ’ஜெய் பீம்’ படத் தலைப்பை பா.ரஞ்சித்திடம் இருந்து பெற்றோம்: அவருக்கு பெரிய மனசு"- சூர்யா
”‘ஜெய் பீம்’ படத்தின் தலைப்பை இயக்குநர் பா.ரஞ்சித்திடம் இருந்துதான் பெற்றோம்” என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள, ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராம் லைவ்வில் தற்போது பேசிக்கொண்டிருக்கிறார் சூர்யா. அவருடன் உரையாடும் தொகுப்பாளினி கீர்த்தியிடம் பேசும்போது,
”‘ஜெய் பீம்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது படம். வாக்காளர் அட்டை, சாதி சான்றிதழ்கூட இல்லாமல் சென்னைக்கு அருகிலேயே 80 கிலோ மீட்டர் தொலைவில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். 1995 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்தான் படமாக உருவாக்கியுள்ளோம். இதற்காக, இயக்குநர் ஞானவேலுக்கு நன்றிகள். ஒரு படம் எடுத்தால் அதில், பொழுதுபோக்கைத் தாண்டி மன நிறைவும் புது கற்றலும் இருக்கவேண்டும். அப்படித்தான், ‘ஜெய் பீம்’ படமும் எனக்கு இருந்தது. நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு படம் பார்த்துவிட்டு ’பக்கத்துல இருந்தால் உங்களைக் கட்டிப்பிடிச்சிக்குவேன்’ என்று நெகிழ்ந்தார்” என்று உற்சாகமுடன் கூறிய சூர்யா, ‘ஜெய் பீம்’ தலைப்பை இயக்குநர் பா.ரஞ்சித்திடம் இருந்து பெற்றதையும் நன்றியுடன் தெரிவித்திருக்கிறார்.
அதுகுறித்துப் பேசும்போது, “இந்தப் படத்திற்கு ‘ஜெய் பீம்’ என்று தலைப்பு வைக்க முடிவு செய்தோம். ஆனால், தலைப்பை இயக்குநர் பா.ரஞ்சித் சார் பதிவு செய்து வைத்திருந்தார். அவரிடம், ‘ஜெய் பீம் தலைப்பை வைத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ’தாராளமா வச்சிக்கோங்க சார். ‘ஜெய் பீம்’ எல்லோருக்கும் பொதுவான வார்த்தை’ என்று அனுமதி கொடுத்தார். ரஞ்சித் சாருக்கு இந்த நேரத்தில் நன்றிக்கூறிக்கொள்கிறேன். அவருக்கு பெரிய மனசு” என்று கூறியுள்ளார் சூர்யா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bkosYc
No comments