உத்தரப்பிரதேசம்: ``சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை'' - அகிலேஷ் யாதவ் `மூவ்' எந்த மாதிரியான யுக்தி?
2022-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. தேசியக் கட்சிகளான பா.ஜ.க-வும், காங்கிரஸும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையமிட்டு மும்முரமாக ஐந்து மாநிலங்களிலும் வேலை செய்துவருகின்றன. இந்த ஐந்து மாநிலங்களில், அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பது உத்தரப்பிரதேச மாநிலம்தான். காரணம், இந்தியாவிலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் வலுவாக இருக்கும் கட்சிதான், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்பதுதான்.
பா.ஜ.க, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம். இந்த நிலையில், நேற்று (நவ. 1) சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ``எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவைக் கட்சி எடுக்கும்'' என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாகச் செய்தி வெளியிட்டது பி.டி.ஐ செய்தி நிறுவனம். `பெரும்பாலும் அகிலேஷ் யாதவ் 2022 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டார்' என்ற தகவலும் சமீபகாலமாகப் பரவிவருகிறது.
Also Read: `நவம்பர் 26 வரைதான் மத்திய அரசுக்கு அவகாசம்...' - தீவிரமடைகிறதா டெல்லி விவசாயிகள் போராட்டம்?
தற்போது அசம்கர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி ஆக இருந்துவருகிறார் அகிலேஷ் யாதவ். அவரது கட்சியான சமாஜ்வாடி உத்தரப்பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உ.பி உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வின் கோட்டைகளான வாரணாசி, அயோத்தி ஆகிய இடங்களில் பா.ஜ.க-வை பின்னுக்குத்தள்ளி அதிக வார்டுகளைக் கைப்பற்றியது சமாஜ்வாடி. குறிப்பாகப் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் அதிக இடங்களைப் பெற்றது அந்தக் கட்சி. மேற்கு உ.பி-யில் விவசாயிகள் ஆதரவைப் பெற்றிருக்கும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியோடு கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்திக்க முடிவுசெய்திருக்கிறார் அகிலேஷ்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க-வோடு கூட்டணியிலிருந்த சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, இந்த முறை சமாஜ்வாடி கட்சியோடு கைகோர்த்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அதிருப்தி காரணமாக விலகிய தலைவர்கள் சிலர் சமாஜ்வாடியில் இணைந்திருப்பதும் அந்தக் கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறது. இந்தத் தேர்தலில் சமாஜ்வாடி ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும், வலுவான எதிர்க்கட்சியாக மாறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்தநிலையில், கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருப்பது எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்கிற விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.
இது குறித்து, ``அகிலேஷ் யாதவ் இதுவரை உ.பி சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டதேயில்லை. நாடாளுமன்றத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டிருக்கிறார். 2017-ம் ஆண்டு, 224 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது சமாஜ்வாடி. அப்போதுகூட அகிலேஷ் போட்டியிடவில்லை. தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்ட மேலவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டுதான் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் அகிலேஷ். எனவே, அவர் போட்டியிடவில்லை என்பது சமாஜ்வாடிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி நிச்சயம் பெரிய அளவில் வெற்றிபெறும்'' என்கிறார்கள் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
``அகிலேஷ் யாதவ் மட்டுமல்ல உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சட்ட மேலவை வழியாகவே முதல்வர் பொறுப்பேற்றார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நான்கு முறை உ.பி-யின் முதல்வராக இருந்திருக்கிறார். அந்த நான்கு முறையும் அவர் சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டே முதல்வர் பொறுப்பேற்றார். இது உத்தரப்பிரதேசத்தில் வழக்கமாக இருக்கும் ஃபார்முலாதான். தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், அகிலேஷ் யாதவும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டால், சமாஜ்வாடி தொண்டர்களுக்கு அது மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும். தற்போது வரையிலும், சமாஜ்வாடியின் முதல்வர் வேட்பாளராக அகிலேஷ் யாதவையே முன்னிறுத்தியிருக்கிறது அந்தக் கட்சி. எனவே, அவர் போட்டியிட்டால், கட்சித் தொண்டர்கள் இன்னும் சிறப்பாகத் தேர்தல் பணி செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
Also Read: பெண் வாக்காளர்களை ஈர்க்கும் பிரியங்கா காந்தி! - உ.பி-யில் காங்கிரஸ் கொடி பறக்குமா?!
அதே நேரத்தில், சமாஜ்வாடி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி, ``அகிலேஷ் அப்படி எதுவும் சொல்லவில்லை. அவர் போட்டியிடுவாரா இல்லை என்பதைக் கட்சி முடிவு செய்யும். அகிலேஷ் தலைமையில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். நிச்சயம் இந்த முறை ஆட்சியமைப்போம் என்று நம்பிக்கை இருக்கிறது'' என்றிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3BEHSSb
No comments