ஆர்யன் கான் வழக்கு விசாரணையில் இருந்து அதிகாரி சமீர் வான்கடே நீக்கம்! - அடுத்து என்ன?
நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த மாத தொடக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதில் முன்னின்று செயல்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை இயக்குநர் சமீர் வான்கடே மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே பணபேரத்தில் ஈடுபட்டதாகவும், பாலிவுட் பிரபலங்கள் மீது போலி வழக்குகளை காட்டி, மிரட்டி பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆர்யன் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பிரபாகர் என்பவர் தெரிவித்த பண பேர குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு டெல்லியில் இருந்து மும்பை வந்து சமீர் வான்கடேயிடம் விசாரணை நடத்தியது. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கும் அடுக்கடுக்காக சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருந்தார். இதனால் புதிய திருப்பமாக சமீர் வான்கடே, ஆர்யன் கான் வழக்கு விசாரணையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கான் வழக்கு, மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் தொடர்பான வழக்கு உட்பட 6 வழக்குகள் சமீர் வான்கடேயிடமிருந்து சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Also Read: ஆர்யன் கானை விடுவிக்க ரூ.50 லட்சம் லஞ்சமா?! - சிசிடிவி-யால் சிக்கும் ஷாருக் கான் மேனேஜர் பூஜா
நிர்வாக காரணங்களுக்காக இவ்வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் இருந்து எந்த அதிகாரியும் நீக்கப்படவில்லை என்றும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உதவி செய்வார்கள் என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 6 வழக்குகளையும் விசாரிக்க டெல்லியில் இருந்து தனிக்குழு மும்பை வருகிறது. இக்குழுவிற்கு ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது குறித்து சமீர் வான்கடேயிடம் கேட்டதற்கு, ``எனது மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் நான்தான் இவ்வழக்குகளை வேறு அதிகாரிகளை கொண்டு விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டேன். நான் இதில் இருந்து நீக்கப்படவில்லை. தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை இயக்குநராக இருக்கிறேன்” என்று விளக்கம் அளித்தார். இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கிடம் கேட்டதற்கு, `இது தொடக்கம்தான்’ என்பதோடு முடித்துக்கொண்டார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/301if0Y
No comments