Breaking News

ஒமைக்ரான்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்தியக் குழுக்கள் அனுப்பிவைப்பு!

கொரோனா வைரஸின் புதிய வகை திரிபான 'ஒமைக்ரான்' நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் கடந்த சில தினங்களாக வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், மத்தியக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

ஒமைக்ரான்

மத்தியக் குழுவினர் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மிஸோரம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இந்தியாவில் சில மாநிலங்களில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரித்திருக்கிறது. அந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விடவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த மாநிலங்களில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிகிறது. அதனால், மேற்கூறிய காரணங்களைக் கருத்தில்கொண்டு பல்வேறு துறை நிபுணர்களைக் கொண்ட மத்தியக் குழுக்கள் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

மத்தியக் குழுவினர் இந்த மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மாநில, மாவட்ட நிர்வாகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உதவுவார்கள். இந்த குழுக்கள் 3 முதல் 5 நாள்கள் தங்கியிருந்து மாநிலங்களுக்கு சுகாதாரத்துறையினருடன் இணைந்து ஆலோசனைகளை வழங்குவார்கள். கொரோனா பரவல் அதிகமாக உள்ள இடங்களைக் கண்காணிப்பது, நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிவது, நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி பணிகளைத் துரிதப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் மத்தியக் குழுவினர் கவனம் செலுத்துவார்கள்.

ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு

மாநிலங்களில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், மருந்து பொருள்கள் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்டவை கையிருப்பில் இருக்கின்றனவா என்பன குறித்தும் உறுதிசெய்வார்கள். இந்த மத்தியக் குழு உறுப்பினர்கள், மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் 10 மாநிலங்களில், மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து தினமும் இரவு 7 மணிக்குள் மத்திய சுகாதாரத்துறைக்குப் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிப்பார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Also Read: Tamil News Today: ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை... வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் 7 நாள்கள் தனிமை கட்டாயம்!



from தேசிய செய்திகள் https://ift.tt/3z2ocrQ

No comments