Breaking News

நடிகர் திலீப் ஒப்படைத்த 6 மொபைல் போன்கள்... அந்த `மேடம்' யார்?! - போலீஸ் தீவிர விசாரணை

கேரள நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து, அதை வீடியோவாக பதிவு செய்த வழக்கில் நடிகர் திலீப் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தன்னை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்க திலீப் சதித்திட்டம் தீட்டியதாக, அவரின் முன்னாள் நண்பரும், சினிமா இயக்குநருமான பாலசந்திரகுமார் வெளிப்படுத்தினார். மேலும் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை திலீப் பார்த்ததாகவும், நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய பல்சர் சுனியை ஏற்கனவே திலீபிற்கு தெரியும் எனவும், அதை வெளியே சொன்னால் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என திலீப் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் பாலசந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விசாரணை அதிகாரிகளை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக திலீப் மீது கிரைம் பிரான்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசரித்த நீதிமன்றம், முன் ஜாமீன் கொடுத்ததுடன், கிரைம் பிரான்ச் போலீஸார் மூன்று நாள் விசாரிக்கவும் அனுமதி கொடுத்தது. மூன்று நாட்களாக 33 மணி நேரம் திலீபிடம் விசாரணை நடைபெற்றது.

பாலியல் தொல்லை

இந்த நிலையில் திலீப் உள்ளிட்டவர்களின் போன் விசாரணைக்கு வேண்டும் என கிரைம் பிரான்ச் போலீஸார் நீதிமன்றத்தில் கேட்டிருந்தனர். அதே சமயம் தனது முன்னாள் மனைவி (நடிகை மஞ்சுவாரியர்) குறித்த சில ஆவணங்கள் மொபைல் போனில் இருப்பதாகவும், போலீஸுக்கு கீழ் உள்ள கிரைம் பிரான்ச் போன்ற ஏஜென்சிகளிடம் போன் பரிசோதனைக்கு விடக்கூடாது. மொபைல் போனில் போலீஸார் கிரிமினல் வேலைகள் செய்யக்கூடும் எனவும் திலீப் கூறியிருந்தார். அவரது வாதங்களை மறுத்த நீதிமன்றம் மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

Also Read: தீவிரமாகும் நடிகை பாலியல் வழக்கு; அதிகாரிகளுக்கு எதிராக சதித்திட்டம்! - விசாரணைக்கு ஆஜரான திலீப்!

இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் ரெஜிஸ்டார் ஜெனரல் அலுவலகத்தில் நேற்று ஆறு மொபைல் போன்களை ஒப்படைத்தார் திலீப். அதில் திலீபுக்கு சொந்தமானது மூன்று மொபைல் போன்கள். திலீபின் சகோதரர் அனூபின் இரண்டு போன்கள், திலீபின் உறவினரான அப்பு என்ற கிருஷ்ணபிரசாத்தின் ஒரு போன் ஆகிய ஆறு போன்கள் ஒப்படைக்கப்பட்டன. அதே சமயம் ஏழு போன்களை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் நடிகர் திலீப் ஒரு ஐபோனை ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், நீதிமன்றம் கூறும் அந்த ஐபோனை தான் உபயோகிக்கவில்லை என திலீப் கூறிவருகிறார்.

நடிகர் திலீப்

இது ஒருபுறம் இருக்க திலீப் அதிகாரிகளுக்கு எதிராக சதி செய்ய ஆலோசனை நடத்திய சமயத்தில் "`மேடம்' அனுபவிக்க வேண்டிய தண்டனையை நான் அனுபவிக்கிறேன்" என கூறியதாக பாலசந்திரகுமார் போலீஸிடம் தெரிவித்தார். அந்த மேடம் யார் என்ற விவதம் கடுமையாக எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோவை திலீபிற்கு கொடுத்த அந்த வி.ஐ.பி யார் என்ற கேள்விக்கும் கிரைம் பிரான்ச் போலீஸ் விடை தேடி வருகிறது. இதற்காக திலீபை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் போலீஸார் கேட்டுள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/wtHzJMXcv

No comments