புதுச்சேரியில் ஆளுநர் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த பாஜக சதி - திருமாவளவன் குற்றச்சாட்டு
புதுச்சேரி: விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு ஆளுநர் மூலமாக மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது என்று திருமாவளன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களைவை உறுப்பினருமான திருமாவளவன் இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தந்தார். முன்னதாக அவர் புதுச்சேரி தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரி மாநில ஆட்சி நிர்வாகத்தில் பாஜகவின் தலையீடு வெளிப்படையாக தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசு சுதந்திரமாக இயங்கிவில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே கிரண்பேடி ஆளுநராக இருந்த போது காங்கிரஸ் அரசுக்கு எத்தகைய நெருக்கடிகளை கொடுத்தனரோ அதேபோல தற்போது என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் மூலம் கடுமையான நெருக்கடிகள் தந்து கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கும் ஆளுநர் மூலம் மத்திய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல் வெளியாகின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமியைப் போல தற்போதைய முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக எதிர்க்காமல் அமைதி காப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும். மத்திய அரசின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி ஜனநாயக சக்திகள் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விசிக கேட்டுக் கொள்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/taLuQxK
via
Post Comment
No comments