Breaking News

ரோட்டோர கடையில் 10 கிலோ மாம்பழம் திருட்டு; காட்டுக்கொடுத்த சிசிடிவி கேமரா - காவலர் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள காஞ்சிரப்பள்ளி பகுதியில் சாலையோரத்தில் வரிசையாக கடைகள் உள்ளன. அதில் சாலையோர மாம்பழக்கடை ஒன்றை உரிமயாளர் சிலநாள்களுக்கு முன் இரவு மூடிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கடையில் சென்று சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. மாம்பழங்களை சரிபார்த்தபோது 600 ரூபாய் மதிப்புள்ள சுமார் 10 கிலோ மாம்பழங்கள் திருடப்பட்டதை கண்டுபிடித்துள்ளார் கடை உரிமையாளர். இதுகுறித்து கடை உரிமையாளர் காஞ்சிரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை நேரத்தில் ஒரு ஸ்கூட்டரில் வந்த நபர் கடையில் இருந்து மாம்பழங்களை திருடும் காட்சியும், அந்த மாம்பழங்களை பைக்கின் சீட்டுக்கு அடிப்பகுதியில் வைப்பதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

மாம்பழத்தை திருடி ஸ்கூட்டரில் வைக்கும் காட்சி

அந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. இதையடுத்து கேமராவில் பதிவான ஸ்கூட்டரின் நம்பரை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாராணையில் இடுக்கி எஸ்.பி அலுவலகத்தில் ஆயுதப்படையில் சிவில் போலீஸ் ஆபீசராக பணிபுரியும் ஷிகாப் என்பவருக்கு சொந்தமான பைக் என கண்டறியப்பட்டது. இதையடுத்து ஷிகாப் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்துள்ளதால் லொக்கேசனை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஷிகாப்-பை சஸ்பெண்ட் செய்து இடுக்கி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். அதிகாலையில் பணி முடிந்து காஞ்சிரப்பள்ளியில் இருந்து முண்டக்கயம் நோக்கி சென்ற ஷிகாப், ரோடோர கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி மாம்பழம் திருடியிருக்கிறார். ஒரு போலீஸ் செய்யக்கூடாத செயலில் ஷிகாப் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக எஸ்.பி-யின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல் துறையை அவமானப்படுத்தும் விதமாக செயல்பட்ட ஷிகாப்பின் செயலை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ரோட்டோர கடையில் மாம்பழம் திருடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஷிகாப்

இந்த நிலையில் 2019-ல் முண்டக்கயம் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கிலும் ஷிகாப் குற்றவாளியாக உள்ள விபரமும் வெளியாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாகவும் ஷிகாப் மீது வழக்கு உள்ளது. அந்த வழக்கு விசாரணை இப்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/uNq6lZi

No comments