Breaking News

கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.750 கோடி கடன் பெற மாநகராட்சி மன்றத்தில் அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர்முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.3,220கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சி பங்களிப்பு தொகையான ரூ.750 கோடி நிதி தேவையை தமிழக அரசின் டுஃபிட்கோ (TUFIDCO) நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற மன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் ரூ.429 கோடியில் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் புதிதாக 516 கழிப்பறைகள் கட்டவும், 68 சிறுநீர் கழிப்பிடங்கள், 69 குளியலறைகள் கட்டவும், பல்வேறு இடங்களில் கழிப்பிடங்களை பழுது பார்க்கவும், குறிப்பாக பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்அதிகம் வந்து செல்லும் மெரினா கடற்கரையில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டவும், ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளை பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் பாடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மெட்ராஸ் எஸ்பிளனேடு ரோட்டரி சங்கம் மூலமாக மகளிர் புற்றுநோய் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uZ5IyCB
via

No comments