Breaking News

பரங்கிமலை ராணுவ அகாடமியில் பயிற்சி அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள்: பார்வையாளர்கள் உற்சாகம்

சென்னை: சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த வீரர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. முப்படைகளிலும் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், நட்பு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜிம்னாஸ்டிக் சாகசத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கூர்க்கா வீரர்களின் புகழ்பெற்ற தற்காப்புக் கலையை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர்.

பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், வீரர்களின்
சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இருசக்கர வாகனங்களில் தேசியக்
கொடியை ஏந்தியபடி 25 வீரர்கள் ஒரே நேரத்தில் பயணித்து சாகசம் செய்தனர்.)

தேசியக் கொடியுடன் பிரமிடு வடிவில் வீரர்கள் பைக்கில் சென்றது, நெருப்பு வளையங்களை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், சீக்கிய வீரர்களின் சாகசங்கள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் ரசிக்கும்படி இருந்தது. சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டிய லெப்டினென்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுகான், அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நைஜீரியா நாட்டு பாதுகாப்பு அகாடமியை சேர்ந்த பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். பயிற்சி முடித்த வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் பங்கேற்று, சாகச நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DNzyCvU
via

No comments