Breaking News

‘தொடர் நாயகன் விருதுக்கு அந்த இந்திய வீரர் தான் தகுதியானவர்’ - ஜோஸ் பட்லர் விருப்பம்

நடப்பு டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருது யாருக்கு கொடுக்கலாம் என்பதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் அவர்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இதில் ஜோஸ் பட்லர், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில் நடப்பு டி20 உலகக் கோப்பைக்கான தொடர் நாயகனை தேர்வுசெய்வதில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. அந்தவகையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது ஐசிசி. ரசிகர்களே வாக்களித்து தொடர் நாயகனை தேர்வு செய்யலாம். இறுதிப் போட்டி முடிந்தபிறகு சாம்பியன் கோப்பை வழங்குவதற்கு முன்னதாக வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.

அதன்படி, இந்தியாவிலிருந்து அதிக ரன்கள் அடித்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானிலிருந்து ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்திலிருந்து சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர், இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா மற்றும் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா என மொத்தம் 9 வீரர்களை டி20 உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதுக்கு ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்த 9 வீரர்களில் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெறும் வீரர் தொடர் நாயகன் விருதை வெல்ல உள்ளார்.

image

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் யார் என இறுதிப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் கேப்டடன் ஜோஸ் பட்லரும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும் தேர்வு செய்துள்ளனர். நாளை இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம் தொடர் நாயகன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த கேப்டன் ஜோஸ் பட்லர், என்னைப் பொறுத்தவரை சூர்யகுமார் யாதவுக்குத்தான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட வேண்டும். சூர்யகுமார் யாதவ் இந்த டி20 உலகக் கோப்பையில் முழு சுதந்திரத்துடன் விளையாடினார். அவரது பேட்டிங்கை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக, நம்பமுடியாத அளவிற்கு கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அவர் ஆடிய விதம் அபாரமானது. எங்கள் அணி வீரர்களான சாம் கரன் மற்றும் அலெக்ஸ் ஹேலஸ் ஆகியோரும் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள். இறுதிப் போட்டியில் அவர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் தொடர் நாயகன் விருதை அவர்கள் இருவரில் ஒருவர் வெல்லவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பையில் அபாரமாக பேட்டிங் ஆடி 189.68 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 239 ரன்களை குவித்து, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த 3-வது வீரராக உள்ளார். அதேநேரத்தில், தொடர் நாயகன் விருது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறும்போது, “ஷதாப் ஆடும் விதத்தை பார்க்கும் போது அவர்தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என நினைக்கிறேன். அவரது பந்து வீச்சு மிகச்சிறப்பாக உள்ளது. அவரது பேட்டிங் விதம் மேம்பட்டுள்ளது. கடைசி 3 போட்டிகளில் அவரது சிறப்பான ஆட்டமும், அவரது சிறந்த பீல்டிங்கும் சிறப்பாக இருப்பதால் தொடர் நாயகன் விருதுக்கான பட்டியலில் முக்கிய வீரராக இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/FkBTglV
via

No comments