Breaking News

மாணவியாக 3 மாதங்கள்... ராக்கிங்கில் ஈடுபட்ட 11 சீனியர் மாணவர்களை சிக்கவைத்த பெண் காவலர் சாலினி!

கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த ராக்கிங் சில நேரங்களில் மிகவும் மோசமாக இருக்கும். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள் அதிக அளவு ராக்கிங் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தெஹ்சீப் காஜி ராக்கிங் செய்பவர்களை பிடிக்க முடிவு செய்தார். இதற்காக பெண் கான்ஸ்டபிள் சாலினி சவுகான்(24) பணியில் நியமிக்கப்பட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் காஜி கூறுகையில், ``அடிக்கடி எங்களுக்கு மர்ம நம்பரில் இருந்து ராக்கிங் நடப்பதாக புகார் வந்தவண்ணம் இருந்தது. சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை மோசமான ஆபாசமான செயலில் ஈடுபட வைத்துள்ளனர்.

தலையணையில் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள சொல்லி துன்புறுத்தி இருக்கின்றனர். புகார் செய்த மாணவர்கள் பயம் காரணமாக தங்களது பெயர்களை சொல்ல முன்வரவில்லை. உடனே நாங்கள் கல்லூரி கேம்பஸ் சென்று சோதனை செய்தோம். நாங்கள் சீருடையுடன் வந்தததை பார்த்த மாணவர்கள் அச்சம் காரணமாக புகார் செய்ய முன் வரவில்லை. புகார் செய்த மாணவர்களின் மொபைல் நம்பரை டிராக் செய்து கண்டுபிடிக்க திட்டமிட்டோம்.

ஆனால் ஹெல்ப்லைன் சட்டத்தில் அதற்கு இடமில்லை. இதனால் சாலினி உட்பட சில கான்ஸ்டபிள்களை சாதாரண உடையில் கல்லூரி வளாகத்தில் உலாவ விட்டோம். அவர்கள் மாணவர்களுடன் டீக்கடை, கேன்டீன்களில் கலந்துரையாடுவார்கள். ஜூனியர் மாணவர்களிடம் பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு ராக்கிங்கின் போது சந்தித்த கொடுமைகள் குறித்து கேட்டுத்தெரிந்து கொண்டோம். இதன் மூலமே சாட்சியை கண்டுபிடித்து ராக்கிங் செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்தோம்” என்றார்.

தினமும் மாணவியைப்போல் உடையணிந்து கல்லூரிக்கு சென்ற கான்ஸ்டபிள் சாலினி இது குறித்து கூறுகையில், ``இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. மாணவியை போல் உடையணிந்து கொண்டு தினமும் கல்லூரிக்கு செல்வேன். மாணவர்களோடு கேன்டீன்களில் பேச ஆரம்பித்தேன். என்னைப்பற்றி முதலில் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

அதன் பிறகுதான் அவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்” என்றார். `மாணவர்கள் உங்கள் மீது சந்தேகப்பட்டு இருக்கிறார்களா?’ என்று கேட்டதற்கு, ``சில நேரங்களில் மாணவர்கள் என்னிடம் கேள்வி கேட்பார்கள். அந்நேரம் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் வேறு எதைப்பற்றியாவது பேச்சை மாற்றி விடுவேன். கேன்டீனில் அதிக கூட்டம் இருக்கும். எனவே மாணவர்கள் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். புத்தகங்கள் இருக்கும் பேக்கை எடுத்துக்கொண்டு ஒரு மாணவர் எப்படி இருப்பாரோ அதே போன்று நான் கல்லூரிக்கு சென்றேன். மொத்தம் 3 மாதங்கள் மாணவியாக நான் நடித்தேன்.

மாணவியாக கான்ஸ்டபிளாக சாலினி

இதில் ராக்கிங்கில் ஈடுபட்ட 11 சீனியர் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதோடு அவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்” என்றார். சாலினி சில நேரங்களில் நர்ஸ் போன்று உடையணிந்தும் சென்று இருக்கிறார். தினமும் 5 முதல் 6 மணி நேரம் கல்லூரியில் செலவிட்டதாகவும் சாலினி தெரிவித்துள்ளார். பிடிபட்ட 11 மாணவர்களில் 9 பேர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மாணவியாக நடித்து ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களை கண்டுபிடித்ததில் முக்கிய பங்கு வகித்த கான்ஸ்டபிள் சாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/FCYPVlo

No comments